tamilnadu

img

மதுரையில் பள்ளிகள் தொடங்கின... உற்சாகமாக சென்ற மாணவ-மாணவியர்....

மதுரை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பத்து மாதங்களுக்குப் பிறகு செவ்வாயன்று 10. 12-ஆம்  வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அரசு, தனியார், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மதுரையில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வகுப்பறைகளுக்குச் சென்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள 534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாநகராட்சிக் கல்வி அதிகாரிகள் இதை உறுதி செய்துள்ளனர்.ஒவ்வொரு மாணவ, மாணவியரும் முகக்கவசம் அணிந்து, சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்தபின், உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.அவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்று, வகுப்பறைக்கு அனுப்பினர். பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக அறிவுறுத்தியபின், பாடம்குறித்துப் பேசினர். சக ஆசிரியர்களும்,மாணவர்களும் பள்ளி வளாகங்களில் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

இதுகுறித்துக் கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘’ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்கள் மட்டுமே இடம்பெறுவர். மாணவர்களைக் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களைத் தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறுபாதுகாப்பு விதிமுறைகள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தனர்.பள்ளி திறக்கப்பட்டது குறித்து தமிழ் யாழினி என்ற 12-ஆம் வகுப்பு (கணினி பிரிவு) மாணவி கூறுகையில், “ ஆன்-லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வந்தேன். குறிப்பாக கணிதம், கணினி அறிவியல் போன்ற பாடங்களை நேரில் ஆசிரியர்களைச் சந்தித்து கற்றுக்கொள்வது அரசுப் பொதுத்தேர்விற்கு பெரும் உதவியாக” இருக்குமென்றார்.

;