உயருக! உயருக!
செங்கொடியே!
எங்கள் உயிரினில்
கலந்த எம்கொடியே!
வேர்வையில் வேர்விட்ட
செங்கொடியே!
பூமியின் பாதையை
மாற்றிய
எம்கொடியே!
சூரியத் தீயில்
நெய்த கொடி!
தியாகிகள் உதிரத்தில்
துவைந்த கொடி!
பசிப்பிணி அறுக்கும்
மூலிகைக் கொடி!
உழைக்கும் வர்க்கத்தின்
தொப்புள் கொடி!
பாசிச இருளை பொசுக்கிய
சுடர்க்கொடி!
மானுடத் தடமெங்கும்
தழைக்கும் பூக்கொடி!
எளியவர் கைகளில்
நிழலாய் திகழும்
ஆதிக்கபுரிகளில்
தழலாய் விரியும்!
பொதுவுடமை வானில்
மின்னல் கொடி!
புரட்சியின் வாசலில்
வரவேற்புக் கொடி!
பூவுலகை கல்லறையாக்க
துடித்த ஹிட்லருக்கு
கல்லறை கட்டியது
எங்கள் செங்கொடி!
சாலையோ, சமூகமோ
சமமாக இல்லையெனில்
சட்டென முளைக்கும்
சமத்துவ செங்கொடி!
மாமேதை மார்க்ஸை
நாடாதே என விரட்டினர்
இன்று அவர் கொடியை
நாடாத நாடில்லை!
சுரைக்கொடி படர்ந்த
தஞ்சைக் குடிசையில்
பறந்த கொடி - எங்கள்
தன்மானத்தை மீட்ட கொடி!
இந்தக் கொடியை
இறக்க மறுத்தே
வெண்மணி தியாகிகள்
வெந்து மடிந்தனர்
எங்கள் கைகளில்
இன்றும் பறப்பது
அவர்கள் காத்த உயிர்க்கொடியே!
துணிக்கொடி அல்ல இது!
துணிவின் கொடி! பசியில்லா
உலகத்தை படைக்கும் வரை
பறக்கும் இக்கொடி!
போரில்லா பூமியை
சமைப்பதற்கும்
அமைதி எங்கும் நிலைப்பதற்கும்
பறக்கும் இந்த போர்க்கொடி!
காற்றடிக்கும் திசையில் அல்ல!
காற்றின் திசையையே
தீர்மானிக்கும் எங்கள் கொடி!
பட்டொளி வீசி பறக்கட்டும்!