tamilnadu

img

ஐஐடியில் இடஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆய்வுக்குழுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்....மத்திய கல்வி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்....

மதுரை:
ஐ.ஐ.டி மாணவர் அனுமதி மற்றும்ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு முறையாக அமலாவது பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு அதன் நோக்கங்களுக்கு எதிரானபரிந்துரைகளை செய்திருப்பதால் அவ்வறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷான்ங்’ கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு அமைச்சர் அக்குழு அறிக்கை பரிசீலனையில் இருப்பதாக பதில் அளித்திருக்கிறார். ஆனால்இட ஒதுக்கீடு தொடர்பான அக்குழு அறிக்கையை கால தாமதமின்றி நிராகரிக்குமாறு சு.வெங்கடேசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் பதில்
மத்தியக் கல்வித்துறை அமைச்சர் 2021 பிப்ரவரி 15 அன்று அளித்துள்ள பதிலில், அக்குழு அறிக்கை இப்பிரச்சனையோடு தொடர்புடைய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கருத்துக்கள் வரப் பெற்றிருப்பதாகவும் தற்போது ஐ.ஐ.டி கவுன்சிலின் நிலைக் குழு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அமைச்சரின் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி, “அவ்வறிக்கை மீது எனது மீண்டும் அழுத்தமான கருத்தை பதிவுசெய்ய விழைகிறேன். அவ்வறிக்கைமுற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்” என்று அக்கடிதத்தில்குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நிழல்
மேலும், “அக்குழு மத்தியக்கல்வி நிலையங்கள் (ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம்2019 பற்றி இரண்டு முன் மொழிவுகளை செய்துள்ளது. திட்டம் (அ) ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களை இடஒதுக்கீடு வரம்பில் இருந்தே நீக்கவேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளது. திட்டம் (ஆ) இட ஒதுக்கீட்டின் வரம்பிற்குள் உதவிப் பேராசிரியர் (தட்டு 1 & 2) மட்டும் இருந்தால் போதும்; மற்ற பதவிகளை இட ஒதுக்கீட்டின் வரம்பில் இருந்து ‘விடுவிக்கலாம்’ என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த இரண்டு முன்
மொழிவுகளுமே மத்தியக் கல்வி நிலையங்கள் (ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019- ஐமுறையாக அமலாக்குவது பற்றிப் பேசவில்லை. உண்மையில் அச்சட்டத்தை பொருளற்றதாக மாற்றுவதாகவே அதன் கருத்துக்கள் அமைந்துள்ளன.” “மத்தியக் கல்வி நிலையங்கள் (மாணவர் அனுமதியில் இடஒதுக்கீடு) சட்டம் 2006” பற்றியும் ஆராய்ந்த அக்குழு அதன் அமலாக்கம் குறித்து முழு திருப்தியைத் தெரிவித்துள்ளது. ஆனால் மாணவர் அனுமதி குறித்து கிடைக்கும் தகவல்களும் தரவுகளும் அறிக்கையின் மதிப்பீடோடு சற்றும் பொருந்தவில்லை. 

இட ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாத பட்சத்தில் அவற்றை பொது இடங்களாக  (Dereservation) மாற்றுவது குறித்த அக்குழுவின் பரிந்துரைகளும் பொது நெறிகளுக்கும் இதுகுறித்த அரசாணைகளுக்கும் முரணானதாக உள்ளது. இடஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படாவிட்டால் அடுத்த ஆண்டே பொது இடங்களாகமாற்றப்படலாம் என அக்குழு பரிந்துரைத்துள்ளது. இது “நிலுவைக் காலியிடங்கள்” (Back log) என்ற கருத்தாக்கத்தையே கொன்று விடும்.ஒடுக்கப்பட்ட பிரிவினர் பிரதிநிதித்துவத்தில் உள்ள இடைவெளியை நிரந்தரமானதாக ஆக்கிவிடும். ஆகவே இத்தகைய முன்மொழிவை நேரடி பணி நியமனங்களில் அனுமதிக்கவே கூடாது.இந்த பரிந்துரைகள் எல்லாம் அக்குழுவின் நோக்கம் பற்றியே சந்தேகங்களை எழுப்பியுள்ளன.”

நிராகரியுங்கள்
“குழுவின் அறிக்கை ஏற்படுத்தியுள்ள குழப்பம் தொடர அனுமதிக்கக் கூடாது. அவ்வறிக்கையை முழுமையாக நிராகரிக்கிற முடிவு காலம் சற்றும் விரயம் ஆகாமல் உடனேஎடுக்கப்பட வேண்டும். ஐ.ஐ.டி கவுன்சிலின் நிலைக்குழு இட ஒதுக்கீட்டின் அடிப்படை நெறிகளை, சட்டத்தின் நியதிகளை மீறக் கூடாது என பொருத்தமாக அறிவுறுத்த வேண்டும்.மேலும் இவ்விரு சட்டங்களின் முறையான அமலாக்கம் எழுத்தும், எழுத்தின் உணர்வும் சற்றும் நீர்த்துப் போகாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி தனது கருத்துக்களிலுள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

;