tamilnadu

img

ஊழல் முறைகேடுகளை களைய தூய்மைப் பணியாளர்களை அரசே நியமனம் செய்ய பரிந்துரை.... ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் பேட்டி....

மதுரை:
தூய்மைப் பணியாளர்களை தமிழக அரசே நேரடியாக நியமனம் செய்ய வேண்டுமென பரிந்துரைக்க உள்ளதாக தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேஷன் கூறினார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வண்டியூரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் வேல்முருகன் குடும்பத்தை தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய வெங்கடேஷன், ‘‘தூய்மைக் காவலர் வேல்முருகன் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது மரணத்தில் குடும்பத்தினருக்கு சந்தேகம் உள்ளது. உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகே வேல்முருகன் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் கூறுகின்றனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வேல்முருகனுக்கு கடந்த ஏழு மாதங்களாக அந்த நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து  எந்த ஒரு பதிலையும் அவரது குடும்பத்திற்கு அந்த நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. வேல்முருகன் உயிரிழப்பு குறித்து  ஆட்சித் தலைவர் த.அன்பழகனுடன் பேசியுள்ளேன். வேல்முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது உறுதியானால் அவரது குடும்பத்திற்கான முழு இழப்பீட்டையும் சம்பந்தப்பட்ட நிறுவனமே வழங்க வேண்டும்’’ என்றார்.
தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்த வெங்கடேசன், அவற்றை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். ஆட்சியரும் குறைகளைக் களைய உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஞாயிறன்று நமது செய்தியாளரிடம் பேசிய வெங்கடேசன், ‘‘தூய்மைப் பணியாளர்களை நேரடியாக அரசே நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொழிலாளர்களிடம் இருந்து ஒருகுறிப்பிட்டத் தொகையை ஒப்பந்ததாரர்கள் பிடித்துக் கொள்கின்றனர். ஊழல், முறைகேட்டிற்கு இதில் வாய்ப்புள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து ஒரு குறிப்பிட்டத் தொகையை பெற்றுக்கொண்டு ஒப்பந்ததாரர்கள் ‘‘இடைத்தரகர்கள்’’ போல செயல்படு கிறார்கள். எனவே தூய்மைப் பணியாளர்களை அரசே நேரடியாக நியமனம் செய்வது குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்’’ என்றார். வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்குமா? எனக் கேட்டதற்கு, ‘‘திருட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணைக்குச் சென்று வந்தவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். விசாரணை முடிவுகள் வந்த பிறகே இதற்கு தீர்வு காண முடியும். ஒரு வேளை காவல்துறையால் தான் மணிகண்டன் உயிரிழந்தார் என்பது தெரியவந்தால் அரசிடமும் இழப்பீடு பெறலாம். சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடமும் இழப்பீடு பெறலாம்’’ என்றார்.
 

;