100 நாள் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
செய்யூர், மே 6- செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தில் பணி செய்த வர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கிட வும் நடப்பாண்டில் உடனடியாக பணி வழங்கிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2024 – 25ஆம் ஆண்டு 100 நாள் வேலை திட்டத்தில் செய்த வேலைக்கு 5 வாரம் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், 2025 – 26ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியும் பல கிராமங்களில் வேலை துவங்கப்படாத நிலையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 2025 - 26-க்கான நூறு நாள் வேலைக்கு ரூ. 86ஆயிரம் கோடியை 2.5 லட்சம் கோடி யாக உயர்த்தி அறிவிக்க வேண்டும், இவ்வாண்டிற்கான ஊதியம் ரூ. 319 உயர்த்தி ஆணை வெளியிட வேண்டும், 100 நாள் வேலை முழுமையாக கிடைக்க உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம், விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், செய்யூர் வட்ட குழுக்களின் சார்பில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் செய்யூர் வட்ட செயலாளர் க.புருஷோத்தமன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னர்கள் எஸ். ரவி, எம்.வள்ளி கண்ணன், செய்யூர் வட்டக் குழு உறுப்பினர்கள் ஜான்சி, ராமமூர்த்தி, கோவிந்தசாமி, ஐயப்பன், ரங்கநாதன், முகுந்தன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க. ஜெயந்தி உள்ளிட்ட பலர் பேசினர். சிபிஎம் நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர். அடுத்த வாரம் முதல் வேலை வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு தற்போது நிதி ஒதுக்கி இருப்பதால் பாக்கியுள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறைவு பெற்றது.