tamilnadu

img

மோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் ‘கோ பேக்’ வாசகமும் கறுப்பு பலூன்களுமே வரவேற்கும்.... கேரள வாலிபர் சங்க நிர்வாகி ஷிஜுகான் பேச்சு....

நாகர்கோவில்:
மோடி, அமித்ஷா என பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் எத்தனை முறை இங்கு வந்தாலும், அவர்களின் விமானம் தரையிறங்கும் போது அவர்களுக்கு கோ பேக் என்ற வாசகமும் கறுப்பு பலூன்களும்தான் அவர்களை வரவேற்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் ஷிஜுகான் கூறினார்.

கப்பற்படை எழுச்சி தின பொதுக்கூட்டம் இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் சார்பில் கலிங்கராஜபுரத்தில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெதீஷ் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரள மாநில செயற்குழு உறுப்பினர் ஷிஜூ கான்  சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாவட்ட செயலாளர் எட்வின் பிறைட்,  வட்டார செயலாளர் சந்தோஷ், பொருளாளர் அனீஸ் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், கேரள மாநில செயற்குழு உறுப்பினர் ஷிஜூ கான் பேசுகையில், ஒரு தொடர்பு கருவியாகத்தான் நாம்மொழியை பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். ஒரு மலையாளி தமிழ்நாட்டில் வந்தால் நன்றாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றோ, ஒரு தமிழர் கேரளாவுக்கு வந்தால் கண்டிப்பாக நன்றாக மலையாளம் தெரிந்திருக்க வேண்டும்  என்றோ கட்டாயமில்லை. ஏனென்றால் இவை இரண்டும் சகோதர மொழிகள். தமிழ்நாட்டிற்கு பெருவெள்ளம், புயல் என எந்த பிரச்சனைகள் வந்தாலும் சகோதர நேசத்துடன் உதவ கேரள மக்கள் தயாராக இருப்பார்கள்.

இரண்டு பெரும் துயரங்களை கேரளம் எதிர்கொண்டது. பல்லாயிரக்கணக்கான மக்களின் உடமைகளும் உயிர்களும் அதற்கு இரையானது. அந்த துயரமான நேரத்தில் கன்னியாகுமரி முதல் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும், ஒவ்வொரு நகரங்களில் இருந்தும் எல்லைகளை தூக்கியெறிந்து விட்டு உதவிகளை வழங்கினர். கேரள மக்கள் தனிமையில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருமனிதனும் கேரள மக்களோடு உண்டு என அறிவித்த காலமாக அந்த பிரளய காலம் இருந்தது. அடிப்படையில் நம்மை ஒன்றிணைப்பது மனிதம்.

பல இடங்களில் ஜாதி, மதங்களால் பெரும் சுவர்களை எழுப்பி மக்களை பிரித்து தங்களுக்குள் மோதிக்கொள்வத ற்கான சூழலை உருவாக்கி கொண்டிருக்கும் போது, அந்தபிரிவினை அரசியலுக்கு எதிரான முற்போக்கு அரசியலை தூக்கி பிடிப்பவர்கள் தமிழக, கேரள மக்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் வகுப்புவாத சக்தியான சங் பரிவார்  ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய போதும், சங் பரிவாரத்திற்கு இங்கு இடமில்லை என சங் பரிவார சக்திகளுக்கு ஆட்சியை மறுத்த மக்கள்தான் தமிழக கேரள மக்கள்.இந்திய நாடாளுமன்றத்தில் பாஜகவின் பெரும்பான்மை எம்பிக்கள் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை செய்யும் போது கூடாது கூடாது என குரல் கொடுக்கும்  தோழர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள்தான் இந்திய நாடாளுமன்றத்தின் வெல்லமுடியாத சக்திகள்.  வரும் சட்டமன்ற தேர்தலில் கேரளத்தில் மீண்டும் தோழர் பினராயி விஜயனின் ஆட்சி மீண்டும்வரப்போகிறது. கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவேண்டும்என கேரள மக்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் விரும்பு கிறார்கள். 1946 ல் சுதந்திர போராட்டத்தின் போது பிரிட்டிஷ் காரர்களுக்கு எதிராக நடைபெற்ற கப்பல் படை எழுச்சியை கொண்டாடி கொண்டிருக்கிறோம். 1920, 30, 40 களில் கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கெதிராக மிகதீவிர மான வீரம்செறிந்த போராட்டங்களை முன்னெடுத்தது. இன்று நாட்டை ஆட்சி செய்யும் சங் பரிவாரத்தினருக்கு, பாஜகவுக்கு, அதன் சகோதர இந்துத்துவ அமைப்புகளுக்கு சுதந்திர போராட்டத்தில் என்ன பங்கு இருக்கிறது? சுதந்திர போராட்டத்தில் எள்ளளவும் பங்கு பெறாத இவர்கள் நமது தேச பக்தியை அளக்கிறார்கள். நரேந்திர மோடியை விமர்சித்தால்
தேசத் துரோக வழக்கு போடுவோம் என கூறுகிறார்கள். தேசத்துரோக குற்றம் என்பது நரேந்திர மோடியை விமர்சிப்பதா.

நாட்டிற்கு எதிராக பேசுவதும், நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசுவதும் வேறு வேறல்லவா? நாட்டிற்கு எதிராக பேசுபவர்கள் அல்ல நாங்கள். ஆனால் நாட்டை சீரழிக்க, ஜனநாயகத்துக்கெதிராக, மதசார்பின்மைக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கின்ற ஆட்சியதிகாரத்துக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம். தேச பக்தியை ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவலம் கம்யூனிஸ்ட்களுக்கு இல்லை.நாட்டின் அரசமைப்பைச் சீர்குலைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மதசார்பின்மைக்கு எதிரான பாஜகவுக்கும் அதன் ஆதரவுகட்சிகளுக்கும் எதிரான  நிலைப்பாட்டை தமிழக, கேரள, வங்காள மக்கள் எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. கேரள தமிழக மக்கள் எப்போதும் எதேச்சதிகாரத்துக்கெதிராக குரல் கொடுப்பவர்கள். கேரளாவிலும், தமிழகத்திலும் வரும் தேர்தலில்  மதச்சார்பற்ற அரசியல் பெருவெற்றி அடையபோகிறது என அவர் பேசினார். 
 

;