ம.பி. பாஜக அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது!
சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது உச்சநீதிமன்றம்
புதுதில்லி, மே 19 - ராணுவ கர்னல் சோபியா மீதான அவதூறால் இந்த நாடே வெட்கப்படு கிறது; தெரிந்தே அனைத்தையும் பேசிவிட்டு மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா-வை உச்ச நீதிமன்றம் கடுமை யாகச் சாடியுள்ளது. மேலும் விஜய் ஷா மீதான புகாரை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புல னாய்வுக் குழுவை அமைக்குமாறும் ம.பி. மாநில டிஜிபிக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் மூலமாகவே பழிவாங்கினோம்!
கடந்த மே 12 அன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, “அவர்கள் (பயங்கர வாதிகள்) நமது (இந்து) சகோதரி களின் சிந்தூரை அழித்தனர். அவர் களை அழிக்க நாம் அவர்களின் சகோ தரியை (ராணுவ கர்னல் சோபியா குரேஷி) அனுப்பி பழிவாங்கினோம். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது இந்து சகோதரர்களைக் கொன்ற னர். பிரதமர் மோடி, அவர்களின் (பயங் கரவாதிகளின்) சகோதரியையே ராணுவ விமானத்தில் அனுப்பி அவர் களின் வீடுகளைத் தாக்கி பதிலடி கொடுத்தார். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளை விதவைகளாக்கி னர். பிரதமர் மோடி, அவர்கள் சமூ கத்தைச் சேர்ந்த சகோதரியையே அவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுப்பினார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
ராணுவ அதிகாரிக்கும் மத அடையாளம்!
தனது பேச்சில் ராணுவ கர்னல் குரேஷியின் பெயரை அமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் சோபியா குரேஷியை குறிப்பிட்டே இவ்வாறு கூறினார். ராணுவ கர்னல் சோபியா குரேஷி இஸ்லாமியர் என்ப தால், அவரைப் பயங்கரவாதிகளோடு (அவர்களும் முஸ்லிம்கள் என்பதால்) இணைத்து, பயங்கரவாதிகளின் சகோதரி என்றார். மதம் கடந்து, அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அந்த ராணுவத்திற்குள்ளும் - அதிலும் கர்னல் போன்ற மிக முக்கியமான பதவியில் இருக்கும் சோபியா குரேஷியை, இந்தியர் என பார்க்காமல், முஸ்லிம் என அடையாளப்படுத்துவதன், பயங்கர வாதிகளின் சகோதரி என்று கொச்சைப்படுத்தியது கடும் கண்ட னங்களுக்கு உள்ளானது.
நடவடிக்கை எடுக்காத பாஜக!
ம.பி. மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா-வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்; அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், பாஜகவோ அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. இதனால், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, அமைச்சர் விஜய் ஷா மீது வழக்கு பதிவு செய்தது. தங்களின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற அடுத்த 4 மணி நேரத்திற்குள் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், “சோபியா என் உடன் பிறந்த சகோதரி போன்றவர். அவரிடம்நான் 100 முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என வீடியோ ஒன்றை வெளியிட்ட அமைச்சர் விஜய் ஷா, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு ஓடினார்.
முதலைக் கண்ணீர்; நீதிபதிகள் சாடல்
ஆனால் உச்ச நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனிடையே, விஜய் ஷா தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தான், மன்னிப்பு கேட்டு விட்டதை கருத்தில் கொண்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் ஷா தரப்பில் கூறப்பட்டது. அதற்கு “நீங்கள் எங்கே மன்னிப்பு கேட்டீர்கள்? அது எந்த மாதிரியான மன்னிப்பு? மன்னிப்பு எனில் அதற்கு அர்த்தம் இருக்கிறது. வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று தான் சிலர் மன்னிப்பை கேட்கிறார்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்கள் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள். உங்களுடையது எந்த மாதிரியான மன்னிப்பு?” என்று பாஜக அமைச்சர் விஜய் ஷா-வை நீதிபதிகள் மிகக் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
மன்னிப்பை ஏற்க முடியாது
“நீங்கள் வெளிப்படுத்தியிருப்பது மோசமான கருத்துக்களாகும். அது முற்றிலும் சிந்தனையின்றி பேசப்பட்டிருக்கிறது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான நீங்கள், ஒரு பொது நபரும் கூட. அப்படி இருக்கையில் பேசும்போது அந்த வார்த்தைகளின் விளைவுகளை தெரிந்து பேச வேண்டும். மக்களின் உணர்வுகள் எவ்வளவு இரக்கமின்றி புண்படுத்தப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, உங்களின் மன்னிப்பு வீடியோவை நாங்கள் ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டனர்.
நாடே வெட்கப்படுகிறது
அத்துடன், “நீங்கள் பேசிய கருத்துக்களை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கிறோம்” என்ற நீதிபதிகள், “ஒரு பெண் அதிகாரி உட்பட மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த குழுவில் இருப்பார்கள். இப்போதைக்கு கைது நடவடிக்கை தேவையில்லை. விசாரணை முடியட்டும். நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். சிறப்பு புலனாய்வுக் குழு வின் அறிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று கூறிய நீதிபதிகள், “உங்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் வெட்கப்படுகிறது. இதிலிருந்து எப்படி வெளியே வர முடியும் என்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. எங்கள் கைகளில் எதுவும் இல்லை” என்று நீதிபதி சூர்ய காந்த் கூறினார். சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பது தொடர்பாக, மத்தியப் பிரதேச மாநில காவல்துறை டிஜிபி-க்கு சில உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பித்தனர்.
ம.பி.யை சேர்ந்தவர்கள் குழுவில் இருக்கக் கூடாது
மத்தியப் பிரதேச கேடரில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப் பட வேண்டும். இந்த குழு உறுப்பினர்களில் யாரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும். மேலும், சிறப்பு விசாரணைக் குழு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியின் தலைமையில் இருக்க வேண்டும் என்றும், மற்ற இரண்டு உறுப்பினர் கள் எஸ்.பி அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்றும், இந்த சிறப்பு புலனாய்வுக் குழு மே 20 அன்று காலை 10 மணிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெளிவு படுத்தியுள்ளனர். சிறப்பு புலனாய்வுக் குழு தனது கண்டுபிடிப்புகளை, நிலை அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அடுத்த விசாரணையை மே 28 அன்று ஒத்திவைத்தது.