tamilnadu

img

இலங்கைக் கடற்படை நடத்திய படுகொலை.... மீனவர்கள் கொந்தளிப்பு....

மதுரை:
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சார்ந்த ஆரோக்கிய ஜேசு (50) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சார்ந்த மெசியா (30), திருப்புல்லாணி ஒன்றியம் தாதநேந்தல் நாகராஜ் (52), உச்சிப்புளியை அடுத்துள்ள வட்டானவலசையைச் சேர்ந்த செல்வம் மகன் செந்தில்குமார் (32), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த  நேசபெருமாள் மகன்என்.சாம்சன் டார்வின் (28) ஆகிய நான்கு பேர் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து திங்கட்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக்கடற்படையினர் எல்லை மீறி வந்ததாகக் கூறி தமிழக மீனவர்களைக் கைது செய்வதற்காக தங்களது கடற்படை ரோந்துக் கப்பலில் துரத்திச் சென்றபோது இராமநாதபுரம் மீனவர்களின் படகில் கடுமையாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் படகு மூழ்கி நான்குமீனவர்களும் நடுக் கடலில் மாயமாகினர்.
இவர்களில் சாம்சன்டார்வினின் சொந்த ஊர் இலங்கையில் உள்ள பேசாலை கிராமம் ஆகும். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மண்டபம் அகதிகள் முகாமில் உள்ளார். இவரது மனைவி பெயர் விஜய லெட்சுமி. இவருக்கு குழந்தை பிறந்து 20 நாட்களே ஆகிறது.

இதுகுறித்து இலங்கைக் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கைக் கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்தியப் படகை சிறைபிடிக்கச் சென்றபோது அந்தப் படகுதங்களது ரோந்துக் கப்பலை சேதப்படுத்தி தப்பிச் சென்றபோது கடலில் கவிழ்ந்து விட்டது எனவும் படகை மீட்கும் பணியும் மீனவர்களைக் கடலில் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியாவின் உடல் மீட்கப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெசியாவிற்கு ஸ்டெல்லா மேரி என்ற தாயும் மூன்று சகோதரர்களும் உள்ளனர்.மெசியாவிற்கு திருமணம் ஆகவில்லை. மெசியாவின் சகோதரர் ஒருவர் ஏற்கனவே இலங்கைக் கடற்படையினர் விரட்டும் போது கடலில் குதித்து உயிரிழந்துள்ளார். மெசியாவின் தந்தை இலங்கைக் கடற்படையினரால் பாதிக்கப்பட்டு மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கவேண்டும். சடலமாக மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்களை உடனடியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தியாவில் தான் உடற்கூராய்வு நடத்தப்பட வேண்டும் என கோட்டைப்பட்டினம் இயந்திரப்படகுகள் சங்கத் தலைவர் சின்ன அடைக்கலம் கூறினார்.வியாழக்கிழமை மாலை கிடைத்த தகவல் படி நாகராஜ் (52), செந்தில்குமார் (32),என்.சாம்சன் டார்வின் (28) ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன. என்.சாம்சனின் மனைவி மண்டபம் அகதிகள்முகாமில் உள்ள சூழலில் சாம்சன் உடல்இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படை நடத்திய கொலை

இதற்கிடையில் கடல் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி கூறியதாவது:

நான்கு பேரின் உடல்களும் வெவ்வேறுஇடங்களில் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள்நான்கு பேரும் இலங்கைக் கடற்படை யினரால் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். 2009-ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து விசாரிக்க வேண்டும். நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும். கடந்த காலங்களில் அமெரிக்க கடற்படை சுட்டு கேரள மீனவர்கள் பலியான போது அமெரிக்கக் கடற்படை ரூ.1 கோடி, கேரள அரசு ரூ. 1 கோடி வழங்கியது போல்,இலங்கை அரசும், மத்திய - மாநில அரசுகளும் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.வருவாய்த்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை காலை தெரிவித்த தகவல்படி நான்கு மீனவர்களின் இறப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வில்லை அவர்களின் விவரங்களைப் பெற முயற்சித்து வருவதாகவும்,   மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு அறிக்கைகளை அனுப்பியுள்ளதாகவும் கூறுகின்றன.இதற்கிடையில் தமிழக மீனவர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ள தமிழகஅரசு அவர்களது குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித் துள்ளதாகவும் கூறுகின்றன.     (ந.நி.)

;