tamilnadu

img

இந்தியில் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சருக்கே திருப்பி அனுப்பி, சு.வெங்கடேசன் எம் பி., பதிலடி.... சட்டவிதி- நீதிமன்ற வாக்குறுதியை மீறியதற்கு கண்டனம்....

மதுரை:
சட்டவிதிகள்,  நீதிமன்றத்தில் அளித்த  வாக்குறுதியை மீறி மீண்டும்இந்தியில் கடிதம் எழுதி அனுப்பிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம்தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள் என்றும்  கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நான் 19 - 3/ 2020 எண்ணிட்ட கடிதம் ஒன்றை உங்கள் அமைச்சகத்தில் இருந்து வரப்பெற்றுள்ளேன். அது இந்தியில் உள்ளது. நான் “நல் வாய்ப்பு” பெற்றவன். அக் கடிதஎண்ணை மட்டுமாவது தெரிந்து கொள்ள முடிந்தது. அக் கடிதத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அக் கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. அதில் இருந்து அக் கடிதம் “காந்தி சமாதான விருதுக்கு” பரிந்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கேட்கிற கடிதம் என்று அனுமானிக்க முடிகிறது. 

தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தொடர்புகள் இந்தியில் அமையக் கூடாது, அவ்வாறு அமைவது அலுவல்மொழிச் சட்டத்திற்கும், அரசு பல்வேறு தேதிகளில் வெளியிட்டுள்ள ஆணைகளுக்கும் புறம்பானது என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்துஎதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளேன். நான் இப்பிரச்சனையில் உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையைக் கூட அணுகினேன். அவ் வழக்கில் மத்திய அரசு வருத்தத்தை தெரிவித்து, இனி தகவல் தொடர்புகள் ஆங்கிலத்தில் அமையும் என்ற உறுதி மொழியையும் அளித்தது. 

இதுவா கலாச்சாரம்?
கடந்த காலங்களில் நான் இந்தி கடிதங்களை மற்ற அமைச்சகங்களில் இருந்து வரப் பெற்றேன். இது கலாச்சார அமைச்சகத்தின் முறை போல. கலாச்சார அமைச்சகத்தின் அதிகாரிகளாவது இம் மாபெரும் தேசத்தின்பன்மைத்துவ கலாச்சார, பன்மொழி மரபு வழியினை உள் வாங்கியவர் களாக இருந்திருக்க வேண்டும். எனக்கு ஒரு ஐயம் எழுகிறது. மத்திய அரசின் இத்தகைய அணுகுமுறை திட்டமிடப்பட்டதோ என்று. சமஸ்கிருதத்தையும், இந்தியையும் இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக தமிழக மக்கள் மீது திணிப்பதற்கான விரிந்த திட்டத்தின் பகுதியோ என்று. இப்படியே தொடர்ந்து செய்தால் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் களைத்துப் போய் எதிர்க்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கக்கூடும். 

எங்கள் வரலாறு
ஆனால் நான் அழுத்தமாக ஒன்றைப்பதிவு செய்ய விரும்புகிறேன். எங்கள் தமிழ்நாடு இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக உறுதியாகப் போராடிய, பல தியாகங்களையும் புரிந்த தனித்துவம் மிக்க வரலாறைக் கொண்டது. ஆகவே நாங்கள் களைத்துப் போய் விட மாட்டோம். எங்கள் அடையாளத்தை பெருமை மிகு கலாச்சாரத்தை பலவீனமுறச் செய்யும்நடவடிக்கைகளை உறுதியாக எதிர்த்து முறியடிப்போம். உங்கள் அமைச்சக அதிகாரிகள் இந் நாட்டின் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். உங்கள் அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்பு அளித்த உறுதி மொழியை மீறியிருக்கிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.  ஆகவே உங்கள் இந்திக் கடிதத்தை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன். உங்கள் அமைச்சகம் இப்படி ஆத்திரமூட்டுகிற நடவடிக்கைகளில் எதிர் காலத்தில் ஈடுபடக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

                                                    *********************

தோழர் சு.வெங்கடேசனின் தொடர் போராட்டம்

ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டிலுள்ள மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கு மத்திய அரசு இந்தியில் கடிதம் எழுதக்கூடாது என்று நீதிமன்றத்தில் போராடி வெற்றியும் பெற்றார் மதுரை எம்.பி. தோழர் சு.வெங்கடேசன்.

ஆனால் நாய் வாலை நிமிர்த்தமுடியுமா?  இப்போது கலாச்சாரத் துறை விருதுகள் தொடர்பாக கலாச்சாரத் துறை துணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் - மறுபடியும் இந்தியில்!அதற்கு சூடாக தோழரும் பதில் எழுதியிருக்கிறார். இந்தியிலுள்ள அந்தக் கடிதத்தைத் திருப்பி அனுப்புவதாக அறிவித்திருக்கும் வெங்கடேசன், அரசு ஏன் மீண்டும் நீதிமன்றத்தை மீறுகிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்.

அமைச்சரின் கடிதத்தையும் தோழரின் கடிதத்தையும் இரண்டையும் இணைத்திருக்கிறேன். தோழரின் பதில் மிகச்சிறப்பாக இருக்கிறது. அரசியல் ரீதியில் “செஞ்சிருக்கிறார்”.  படித்துப்பாருங்கள்.இந்தியக் கலாச்சாரம் என்றால் அது இந்து - இந்திக் கலாச்சாரம் தானே என்று பிரகலாத் படேல் தீவிரமாக யோசிக்கக்கூடும். ஆனால் நாமும் விடக்கூடாது. இந்தப் பிரச்சனை வெறும் ஒரு மொழிப் பிரச்சனைதானே என்று கருதி இங்கே பலர் கடந்துபோய்விடுவார்கள் என்று நமக்குத் தெரியும். 

ஆனால் அரசியல்சாசன நெறிமுறைகளை மீறி மீண்டும் மீண்டும் ஒற்றைமொழி ஆதிக்கத்தைக் கொண்டு வர நினைக்கும் மோடி அரசாங்கத்தை அம்பலப்படுத்திப் புறக்கணிப்பதற்கு, மொழி உரிமை அரசியல் ஒரு உணர்ச்சிகரமான போர்க்களம் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது நல்லது.என்னதான் திருக்குறளை மேற்கோள் காட்டினாலும் ராஜேந்திர சோழன் புகழ்பாடினாலும் தில்லிக்கு தமிழ்நாட்டின் உணர்வு ஒருபோதும் புரியப்போவதில்லை. அவங்க “கலாச்சாரம்” அப்படி.

ஆழி.செந்தில்நாதன், முகநூல் பதிவு
 

;