tamilnadu

img

ஜனநாயகப் பெருங்குரல் ஓங்கட்டும்!

மோடி அரசின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கியதால் ஸ்டான்சுவாமி உள்ளிட்ட 16 செயற்பாட்டாளர்களை உபா சட்டத்தின்கீழ் கைது செய்து காலவரையின்றி சிறையில் அடைத்தது  ஒன்றிய பாஜக அரசு. இவர்களில் ஸ்டான்சுவாமி சிறையிலேயே மரணமடைந்தார். மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் எனும் இடத்தில், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வரலாற்று நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்த மக்கள் கூடிய நிகழ்வில், பட்டியலின மக்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் - பாஜக தூண்டுதலில் பெரும் கலவரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆனால்  இந்தக் கலவரத்தை பட்டியலின மக்கள் தரப்பில் தூண்டிவிட்டதாகக் கூறி பேரா.ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ், சுதாபரத்வாஜ், கவுதம் நவ்லாகா, அருண் பெரைரா, வெர்னோன் கன்சால்வ்ஸ், சுதிர் தாவ்லே, சுரேந்திர காட்லிங், ரோனா வில்சன், முனைவர் ஷோமா சென், மகேஷ் ராவுத், ஜோதி ஜக்தாப், சாகர் டாட்யாராம் கோர்கே, ரமேஷ் முரளிதர் கெய்சோர், ஹனிபாபு ஆகிய 15 பேர் மீது பொய் வழக்குகள் புனைந்து, உபா சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தியது மோடி அரசு. பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள, இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர் பெருமக்களான மேற்கண்ட செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி “பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம்” சார்பில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 அன்று மாபெரும் மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலியில்    பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இவ்வியக்கத்தில் பங்கேற்ற தலைவர்கள் ஆற்றிய உரையின் அம்சங்கள் வருமாறு:

உங்கள் விரல்களோடு எங்கள் விரல்களையும்

“பீமா கோரேகான் -16 என்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், உபா சட்டத்தின் கீழ் பொய்யாக பீமா கோரேகான் சதி வழக்கில், கைதுசெய்ய ப்பட்டுள்ள சமூக செயல்பாட்டாளர்கள் விடு தலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழ்நாட்டில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.  உபா (UAPA) போன்ற கொடுங்கோன்மை சட்டங்களை பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனென்றால் வர லாற்று ரீதியாக அத்தகைய சட்டங்கள் தீவிர வாத நடவடிக்கையை கட்டுப்படுத்த பயன் பட்டதில்லை. மாறாக சமூகத்தின் நலிந்த பிரி வினரை குற்றவாளியாக்கவும் போராட்டக் காரர்களை தடுக்கவுமே பயன்படுத்தப் படுகிறது.

பல மாநில அரசுகளும் தங்களது மாநில சட்டங்களில் கைது செய்யப்பட்டவர் களுக்கு பிணை மறுக்கின்ற மற்றும் விசார ணைக்கு முந்தைய தடுப்புக்காவலை நீட்டித்தல் மற்றும் சாதாரண நடவடிக்கை களை குற்றமாக்குதல் போன்ற கடுமையான பிரிவுகளைக் கொண்டுள்ளன.  இந்தச் சட்டங்கள் நமது அரசியல் சாசன சட்டத்துடன் முரண்படுகின்றன என்பதால் இவை எதிர்க்கப்பட வேண்டும் என்ற தேசிய சிவில் உரிமை குழுக்களின் கருத்தோடு நாங்கள் ஒன்றுபடுகிறோம். பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்  பட்டுள்ள 16 பேரும், இனவாத - சாதியவாத  - மதவாத மற்றும் தண்டனைச் சட்ட நீதி  வழங்கல் முறைமையின் கீழ் பலியாக்கப் பட்டுள்ளவர்களில் சிலரே என்பதை நாங்கள் அறிவோம். ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைய பேர் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு, போலி விசாரணைகளுக்கு உள்ளாகி சிறையில் வாடுகிறார்கள். அரசின் அநீதிகளுக்கு எதி ராக அவர்கள் நின்றதும், தங்கள் மனச் சாட்சிப்படி நடந்து கொண்டதுமே காரணம். அவர்களின் விடுதலைக்காகவும் நாங்கள் குரல் கொடுக்கிறோம்.  நாங்கள் நீங்கள் நடத்திய மனித சங்கிலி யில் நேரடியாக இணைய முடியவில்லை. இருந்தாலும் உணர்வு ரீதியாக உங்களோடு ஒன்றுபடுகிறோம். தோளோடு  தோள் சேர்த்து அநீதிக்கு எதிரான உங்கள் அனைவரின் விரல்களோடு எங்கள் விரல்களையும் இணைக்கிறோம். 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் : மினல் காட்லிங், மோனலி ராவுத், ஷரத் கெய்க்வாட், கோயல் சென், சாகர் ஆப்ரகாம் கன்சால்வ்ஸ், ஹேமலதா, மாய்ஷா சிங், ஜெனிபர், ஷாபா ஹூசைன், ரமா டெல்டும்டே, ஜெனி ரோவேனா, ரூபாலி ஜாதவ், பிரனாலி பராப், சுரேகா கோர்கே, ராம்தாஸ் உன்ஹாலே, அருட் தந்தை ஜோ சேவியர்

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

மோடி அவர்கள் ஒருநாள் தொலைக் காட்சியில் இரவு 8 மணிக்குத் தோன்றி 500 ரூபாய் நோட்டும் 1000 ரூபாய் நோட்டும் இந்த நிமிடத்திலிருந்து செல்லாது என்று அறிவித்தார். இப்போது திடீரென்று நிதிஅமைச்சர் தொலைக்காட்சியில் தோன்றி இந்த நாட்டின் 6 3/4  லட்சம் கோடி பொதுச் சொத்துக்களை கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப் போகிறோம் என்று சொல்கிறார். இதை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்டால் தேச விரோதி என்று சொல்வார்கள், ஏன் பொதுத்துறையை தனி யாருக்கு விற்கிறீர்கள் என்று கேட்டால் பயங்கரவாதிகள் என்று உங்களை சொல்வார் கள். இது நாட்டின் இறையாண்மைக்கு எதி ரானது என்று கேட்டால் நீங்கள் வெளியிலே இருக்கமுடியாது சிறையிலே இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இப்படிக் குற்றம்சாட்டப் படுகிறவர்களை  கைது செய்தால் அவர்கள் ஏன்  கைதுசெய்யப்படுகிறார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.   இந்தச் சட்டத்தில் கைதுசெய்தால் அது வெளியே தெரியாது. எப்போது வெளியே வரு வார்கள், சிறையிலே இறந்துபோனால், வெளி யில் தெரியவரும். இப்படி ஒரு சட்டம் இந்தியா வுக்கு தேவையா?  உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா கேட்கிறார், “ நம் நாட்டை அடக்கி ஆள வந்த வெள்ளைக்காரர்கள் இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவந்தனர், 75ஆவது சுதந்திர தினம் கொண் டாடும் போது கூட இத்தகைய சட்டத்தை ஏன்  வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று மோடி அரசு நீதிமன்றத்தில் பதில் சொல்லியிருக்க வேண்டும் இல்லையா? இன்று வரை பதிலே சொல்லவில்லை. 

தொல்.திருமாவளவன் எம்.பி.,
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

16 செயல்பாட்டாளர்களை  விடுதலை செய்யக்கோரி இந்தியாவில் முதல் முறையாக வீதியில் நின்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல் போராட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைத்திருக்கிற இந்த மனிதச்சங்கிலி போராட்டம்தான். இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப் படுகிறார்களோ இல்லையோ, பொதுமக்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்ட த்தின் மூலமாக கைது தொடர்பான  அரசியல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மோடி அரசு இந்த  தேசத்தை விற்றுக் கொண்டிருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது. சாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்துகிறது. சிறையில் இருப் பவர்களை விடுவிப்பதற்காக மட்டுமல்ல, நாட்டையே பாஜகவிடமிருந்து  விடுவிப்பதற் காக நாம் போராட வேண்டும். 

பி. சம்பத்
மதிப்புறு தலைவர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா இடதுசாரி, ஜனநாயக, தலித், சமூக  நீதி இயக்கங்கள் ஒன்று திரண்டு பீமா கோரே கான் சதி வழக்கிற்கு எதிராக குரல் கொடுக் கின்றன. இத்தகைய கை கோர்ப்பு இந்திய அர சியலின் இன்றைய தேவை. முக்கியத்துவம் வாய்ந் ததும் ஆகும். ஜனநாயகம் அச்சுறுத்தப் படுகிறது. மாற்றுக் கருத்து உள்ளவர்களை வேட்டையாடு கிறார்கள். மக்கள் மீது விலைவாசி உயர்வு, வாழ்வுரிமை பறிப்பு ஆகியன அரங்கேற்றப்படு கின்றன. இதற்கு எதிராக மக்கள் ஒன்றுபடக் கூடாது என்பதற்காக அவர்களின் ஒற்றுமை சிதை க்கப்படுகிறது. ஆகவே நமது போராட்ட இயக்கங் கள் வாயிலாகவே இந்த அடக்குமுறைகளை முறியடிக்க வேண்டும்.

கே. சாமுவேல்ராஜ்
பொதுச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ என்கிற ‘உபா’ சட்டம் முற்றி லும் சட்ட விரோதமாகச் செயல்படுகிறது. எவரை யும் கைதுசெய்யலாம், சிறையில் அடைக்க லாம், பிணையை மறுக்கலாம் என்கிற இந்த  ஜனநாயக விரோதச் சட்டத்தை எதிர்த்து ‘சர்வ தேச ஜனநாயக தினத்தில்’ தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழ கத்தில் இருக்கிற ஏறத்தாழ அனைத்து ஜனநாயக சக்திகளும், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத் தில் பங்கெடுத்திருக்கிறார்கள். சிறையில் இருக்கும் அறிவார்ந்த ஆளுமைகளை, கவிஞர் களை, எழுத்தாளர்களை, செயல்பாட்டாளர் களை, சிவில் உரிமைப் போராளிகளை அரசு  உடனடியாக விடுதலை செய்திடவேண்டும், உபா சட்டத்தை திரும்பப் பெறவேண்டும், மாநில அரசுகளின் அனுமதி பெறாமல் தேசியப் புலனாய்வு முகமை - (என்ஐஏ)  நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது. பீமா கோரேகான் வழக்கில் மட்டுமல்ல, எண்ணற்ற வழக்குகளில் பல்லாயிரக்கணக்கானோர் இந்திய சிறைகளில் வாடுகிறார்கள். விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற அனைவரையும் விடுவித்திட வேண்டும்.

கோவை இராமகிருஷ்ணன் தலைவர், தந்தை பெரியார்  திராவிடர் கழகம்

இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ள  அறிவு ஜீவிகளை, செயற்பாட்டாளர் களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். இந்தியா முழுமையும் ஜனநாயக உரிமைகளை, குரல்களை ஒடுக்குவதற்கு சட்டங்களைப் பயன்படுத்துகின்றன. ஜனநாயக விரோத உபா  சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய புல னாய்வு முகமை சட்டத்தையும் மாற்றவேண்டும்

இரா.அதியமான்
நிறுவன தலைவர், ஆதித் தமிழர் பேரவை

மகாராஷ்டிராவில் உள்ள பீமா கோரே கான் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த வரலாற்று சிறப்பு மிக்க அடையாளம். அங்குள்ள நினைவுத் தூணை காண்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள்  கூடுகிறார்கள். இதை சனாதன ஆட்சியாளர் களால் பொறுக்க முடியவில்லை. அந்த  கூடுகை தங்களின் சனாதனக் கொள்கைகளுக்கு தடைகளை உருவாக்கும் என்று கருதுகிறார்கள். அதற்காகவே இந்த சதி வழக்கு. அம்பேத்கர் பேரன் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். வரவர ராவ் போன்ற பல ஆளுமைகள் சிறையில் வாடுகிறார்கள். ஸ்டேன் சுவாமி சிறையிலேயே மரணத்தை தழுவியுள்ளார். மற்றவர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற நிலைமை இருக்கிறது. பீமா கோரேகான் பற்றி ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைய பேருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இந்த சதி வழக்கு பலருக்கும் அதன் வரலாற்றை தெரிய வைத்துள்ளது. இந்த எழுச்சி நாடு முழுக்க பரவ வேண்டும். பீமா கோரேகான் வழக்கில் சிறைப் பட்டவர்கள் விடுதலை ஆக வேண்டும். ஜனநா யக உரிமைகள் பாதுகாக்கப்பட பெருங்குரல் எழ வேண்டும்.

நாகை திருவள்ளுவன்
தலைவர், தமிழ்ப் புலிகள் கட்சி

இந்துத்துவா அரசியல், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களி டையே பாகுபாட்டை வளர்த்துக்கொண்டிருக் கிறது, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்துக்கான விதையை இந்த இரண்டு சக்திகளும் விதை க்கும்.  பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடை யவர்கள் என்று கைதுசெய்யப்பட்டுள்ள செயல்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றிய அரசு விடுவிக்கவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் தமிழகத்தின் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவும்.

சு. வெங்கடேசன் எம்.பி.,
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

பீமாகோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட பேராளுமைகள் அனை வரும் மக்களுக்காக சிந்தித்தவர்கள். பொய் என உலகம் அறிந்த வழக்கு இது. ஆனாலும் பிணைகூட வழங்க மறுத்துவருகிறது ஒன்றிய அரசு. குறைந்தபட்ச மனித உணர்வுகள் கூட  காட்டப்படாததால்  ஸ்டேன்சுவாமி சில வாரங் களுக்கு முன் மரணமடைந்தார். அரசு நினைத்தால் எதையும் ஒடுக்கும் என்பதற்கான உதாரணமாக இதை நிறுவ நினைக்கிறது. ஆனால் அதை உடைத்து முன்னேறும் சக்தி மக்களுடையது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். பீமாகோரேகான் சதிவழக்கில் இருந்து நமது ஆளுமைகளை விடுதலை செய்திடக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெறும்  மனிதச் சங்கிலி போராட்டம் இது. நாம் ஒவ்வொருவரும் நமது கைகளை பிணைத்துக் கொள்வது மிக அவசியம். எவ்வளவு மெலிதென்றாலும் இப்போதே நாம் குரலை எழுப்பியாக வேண்டும். எவ்வளவு சோர்வாக இருந்தாலும், நீதிக்காக இப்போதே நாம் எழுந்து நிற்க வேண்டும்!

மு.வீரபாண்டியன் 
பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்

அம்பேத்கர், பீமா கோரேகானில் ஆற்றிய உரை முக்கியமானது. அவரின் உரை இந்தியச் சமூகத்திற்கு வழி காட்டக் கூடியது. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான குரலும் சேர்ந்து ஒலிக்க வேண்டும். மதவெறி அரசியல் மூலம் இந்த ஒற்றுமையைச் சிதைக்க முயற்சிக்கிறார்கள். கருத்தியல் தெளிவோடு மனித குல எதிரிகளை நாம் எதிர் கொள்ள வேண்டிய தருணம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. இந்த விரிந்த ஒற்றுமையை விடாது முன்னெடுத்து முன்னேறுவோம்.

தொகுப்பு : க.சுவாமிநாதன்





 

 

;