tamilnadu

img

அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்..... அடிப்படை வசதிகளை செய்து, மயானங்களை அதிகப்படுத்துக..... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....

மதுரை:
கொரோனா தொற்றால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தற்போது பராமரிக்கப்படாமல் உள்ள மயானங்களில் அடிப்படை வசதிகளை செய்துகொடுத்து செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று மதுரை மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும் கொரோனா பெருந்தொற்றால் மதுரையில் மரணமடைவோரின் இறுதி நிகழ்ச்சிகளை தனி மயானத்தில் நடத்த வேண்டும். இதனால் இறந்தவர்களின் அஸ்தியை தாமதமில்லாமல் அவர்கள் உறவினர்கள் பெற்றுச்செல்வர். நீண்ட கால தாமதம் தவிர்க்கப்படும் என்றும் வலியுறுத்தினர். மதுரையில் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களது உடல்கள் தத்தனேரி மயானத்திலும், கீரைத்துறை மயானத்திலும் எரியூட்டப்படு கிறது. எரியூட்டல் விடிய விடிய நடைபெறு
கிறது என்ற தகவல் மக்களிடத்தில் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.மதுரையில் செவ்வாயன்று மட்டும் 70 உடல்கள் எரியூட்டப்பட்டதாக பணியாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் இயற்கை மரணம்,விபத்துகளால் உயிரிழப்பவர் உடல்களும் இந்த மயானங்களுக்குத்தான் கொண்டுவரப் படுகின்றன. இதனால் மதுரை நகரில் உள்ள பிற மயானங்களில் இயற்கை மரணம், விபத்துகளால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உதாரணத்திற்கு கூடல்நகரை அடுத்துள்ள தினமணி நகரில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. இங்கு மின் விளக்குவசதியில்லை. மின் விளக்கு வசதி ஏற்படுத்தினால் இங்கு உடல்களை எரியூட்ட முடியும். தினமணி நகருக்கு எதிரில் கோவில்பாப்பாகுடி ஊராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. இங்கும் மின் விளக்கு வசதியை ஏற்படுத்தினால் உடல்களை எரியூட்ட முடியும்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மா. கணேசன், ஜா.நரசிம்மன், ம. பாலசுப்பிரமணியம் ஆகியோர் மதுரைமாநகராட்சி ஆணையாளரிடம், “ தத்தனேரி,விளாங்குடி, மானகிரி, பசுமலை, அவனியாபுரம், கடச்சனேந்தல், கிருஷ்ணாபுரம் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்களை இயற்கை மரணம் அடைந்தவர்களை எரிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். 

தகனம் செய்ய அதிக கட்டணம் 
மேலும், இறந்தவரின் உடலை தகனம் செய்வதற்கு 25 பேருக்கு மேல் வரக்கூடாது என்ற நிலையில் தத்தனேரி மயானத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. அதிகமானோர் கூடுவதைக் குறைக்க நடவடிக்கை வேண்டும். தத்தனேரி மயானத்தில் மாநகராட்சி குறிப்பிட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உடலை எரியூட்டுவதற்கு  மாநகராட்சி ரூ.1,300 நிர்ணயம் செய்திருந்தால் ரூ.5 ஆயிரம் வரை  கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 
தென் மாவட்டங்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத்தான் வருகிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழக்கும் சூழ்நிலையில் அவர்களை எரிப்பதற்கு தத்தனேரி அல்லது கீரைத்துறை மயானத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் உணவு குடிநீரின்றி தவிக்கின்றனர். இதற்கு மாநகரட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.ஆணையாளர் ச.விசாகன் கூறுகையில், “ மதுரை நகர் பகுதிகளில் மருந்து தெளிப்பதற்கு, பிளிச்சிங் பவுடர்  தூவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாநகரில் தினசரி 80 ஆயிரம் நபர்களுக்கு கபசுர குடிநீர்வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தத்தனேரி மயானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இன்னும் இரண்டு அலகு களில் எரியூட்டலுக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

;