tamilnadu

img

தமிழகத்தில் பிரகாஷ் காரத் எழுச்சிப் பிரச்சாரம்.....

மதுரை:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் துவக்கி வைத்த அதே நாளில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 26, 27 ஆகிய இரண்டு நாட்களும் பிரகாஷ் காரத் மேற்கொண்ட பயணம் தமிழகத்தில் 5 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரப் பயணமாகவே அமைந்தது. 

சிதம்பரத்தைத் தொடர்ந்து நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 27 சனிக்கிழமை திண்டுக்கல்லில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் துவக்க மாநாடு பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது. பிரகாஷ் காரத், கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்ட செயலாளர் ஆ.சச்சிதானந்தம் ஆகிய தலைவர்கள் உரையாற்றினர்.

இதைத்தொடர்ந்து தேனியில் நடைபெற்ற உற்சாகமிக்க  பிரச்சாரத் துவக்க மாநாட்டில் பிரகாஷ் காரத், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன், மூத்த தலைவர் கே.ராஜப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர.

அன்றைய நாளின் நிறைவாக மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் உரையாற்றினார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றிக்கும் இடதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் கட்டியம் கூறும் விதமாக மதுரை பொதுக்கூட்டம் அமைந்திருந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் இரா.விஜயராஜன், சி.ராமகிருஷ்ணன், கே.அர்ஜூனன், வி.காசிநாததுரை, கே.வீரபாண்டி, மூத்த தலைவர் என்.நன்மாறன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், கே.சாமுவேல்ராஜ், எஸ்.கே.பொன்னுத்தாய், எம்.மகாலட்சுமி, எஸ்.பாலா, எஸ்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சிதம்பரத்தில் துவங்கி மதுரை வரை அனைத்து பொதுக்கூட்ட மையங்கள் மட்டுமின்றி, வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் பிரகாஷ் காரத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

;