tamilnadu

img

பசியும் பிணியும் எம்மக்களை அண்டாதிருக்க.... மாமதுரையின் அன்னவாசல்...

மதுரை:
கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் மதுரை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு சுமார் 2 மாத காலம் உணவளித்த பெரும் இயக்கமாக நடைபெற்றது ‘மாமதுரையின் அன்னவாசல்’.

2020 மார்ச் இறுதியில் இப்பூவுலகை பீடித்த கொரோனா பெருந்தொற்று மனிதகுலத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதலாக அமைந்தது. அதைவிட இந்தியாவில் நரேந்திர மோடி அரசு அதை கையாண்ட விதம் மிகக்கொடூரமான தாக்குதலாக மாறியது. பசியும் பிணியும் ஒட்டுமொத்த மக்களையும் சூழ்ந்தது. அதிலும் குறிப்பாக உழைப்பாளி மக்கள், வேலையிழந்தவர்கள், திடீர் ஊரடங்கால் வாழ்விழந்து வீதியில் வீசப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்கள், சமைத்து உண்ண வழியின்றி தனித்து விடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என எளிய மக்கள் முடிவற்ற துயரின் பிடியில் சிக்கினார்கள். இந்த தருணத்தில் கொரோனா நிவாரணத்திற்கு தேவை என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் பறித்துக்கொண்டது மத்திய அரசு. யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. 

ஆனால் கண்முன்பே எளிய மக்கள் பசிப்பிணியால் துடிதுடித்து வீழ்ந்துவிடுவார்களோ என்ற பதைபதைப்பும் அரசின் மீதான கோபமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களை பற்றிக்கொண்டது. துயரில் சிக்கியிருக்கும் மக்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று ஆங்காங்கே பல முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சிகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போன்று பிரம்மாண்டமாக நடந்த பேரியக்கம்தான் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கிய ‘மாமதுரையின் அன்னவாசல்’ .

மதுரை மாநகரிலும் புறநகரிலுமாக 18 உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் 416 தொண்டர்கள் சுமார் 2 மாத காலம் பம்பரமாக சுழன்று ஒரு லட்சத்து 60 ஆயிரம் உணவுப்பொட்டலங்களை பசித்தோரின் கைகளுக்கு கொண்டுசேர்த்தனர். 

இந்த பிரம்மாண்ட இயக்கத்தின் வீச்சு அறிந்து திரைக்கலைஞரும் சமூக ஆர்வலருமான சூர்யா உட்பட நல்லெண்ணம் கொண்ட பலரும் அன்னவாசலுக்கு நிதியும் பொருட்களும் வாரி வழங்கினர். கொரோனா பாதிப்பும் பரவலும் பின்னர் கணிசமாகக் குறைந்து, புதிய ஆண்டு பிறந்துள்ள நிலையில், மாமதுரையின் அன்னவாசல் எனும் மாபெரும் பணியை ஆவணப்படமாக தயாரிக்கும் பணியில் இயக்குநர் செந்தில் நடராஜன் ஈடுபட்டார். அவரது இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பிலும் ஜான் ராமின் ஒளிப்பதிவிலும் உருவாக்கியுள்ள அந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தினை, புத்தாண்டு தினத்தன்று இந்தியாவின் இளம் மேயரான திருவனந்தபுரம் ஆர்யா ராஜேந்திரன் தமது முகநூலில் வெளியிட்டிருக்கிறார். அதேவேளையில் டிவிட்டரில் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் குணசேகரனும் இன்ஸ்டாகிராமில் கர்நாடக இசைக்கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணாவும் வெளியிட்டுள்ளனர். 

பசியும் பிணியும் எம்மக்களை அண்டாதிருக்க என்ற முழக்கத்துடன் வெளியாகியுள்ள அந்த முன்னோட்டத்தில், “ பசியும் பிணியும் அண்டாதிருக்க வேண்டும் என்பதே இந்த உலகின் பெருங்கனவு. அந்த பெருங்கனவின் சிறிய முயற்சியாக மாமதுரையின் அன்னவாசலை மதுரை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்” என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.'

;