tamilnadu

நவ.1 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கம்

சென்னை, அக்.26- பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் ரயில்களை நவம்பர் 1 ஆம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு தொற்று பாதிப்பு குறைந்ததால் அனைத்து பகுதிகளுக்கும் தெற்கு ரயில்வேயால் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், தற்போது 2-வது அலை பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. மேலும், திரையரங்குகளிலும், 100 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டு விட்டன. மேலும், மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். பேருந்து களும் 100 விழுக்காடு இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில்,  தமிழகத்தில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடையே இருந்தது வந்தது. கொரோனா தொற்றின் காரணமாக, ரயில்களில் மட்டும் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு இருக்கைகளாக இயக்கப்படுவதால், பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்கள் இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்களை இயக்கமுடியும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஏற்கனவே அறிவித்தபடி, முதற்கட்டமாக தெற்கு ரயில்வேயில் 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

;