tamilnadu

img

தேர்வு மையங்கள்; மாணவர்களுக்கு இழைக்கப்படும் தொடர் அநீதி - சு. வெங்கடேசன் எம்.பி

மதுரை, மார்ச் 7 -
தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி  விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;
தேர்வு மையங்கள் குறித்த பிரச்சனை தொடர்ச்சியாக நடந்து கொண்டே வருகிறது. 
குறிப்பாக முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தேர்வு மையங்கள் விசயத்தில் அரைமணி நேரத்தில் தமிழ்நாடு , கேரளா தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டன. தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மாணவிகளின் பெற்றோர்கள் “எத்தனை மாநிலங்களுக்கு, எத்தனை நாள் நாங்கள் இப்படி அலைவது?“ என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். 
ஒன்று தேர்வு மையங்களை மாநிலத்தை விட்டு வெளியே கொடுப்பது , இல்லையெனில் மாநிலத்திற்கு உள்ளாகவே தொலைதூர நகரங்களில் கொடுப்பது என்பது தொடர்கதையாக உள்ளது . 
மாணவர்களுடைய தேர்வு மையம் மாணவர்களுடைய மன அமைதியையும், பயண வாய்ப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத செயலாகவே இருக்கிறது. எளியவர்களின் வாய்ப்பினைப் பறிக்கும் மற்றுமொரு வாய்ப்பாக இது பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் உருவாவது தவிர்க்க முடியாததாகிறது.
குறிப்பாக தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசின் துறை சார்ந்த தேர்வுகளில் 
இத்தகைய போக்குகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 
தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதிகளுக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். குரலெழுப்புவோம் ! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

;