tamilnadu

img

தமிழக - கேரள மக்களிடையே மோதலை ஏற்படுத்த முனைவதா?

நாகப்பட்டினம், ஆக.8- தமிழக - கேரள மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக போராட்ட  அறிவிப்பு வெளியிட்டுள்ள அதிமுகவின் இரு கோஷ்டியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்களன்று நாகப்பட்டினத்தில் செய்தி யாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டது தொடர்பாக அதிமுக சட்டமன்றக் குழு  துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரும், அதிமுகவின் மற்றொரு அணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில், கேரள அரசுக்கு சாதகமாக தண்ணீர் திறந்துவிட்டுவிட்டது போல குறிப்பிட்டுள்ளனர். இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இவர்களது இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த அறிக்கை அரசியல் நேர்மை யற்றது; சுயலாப நோக்கம் கொண்டது; அமைதியாக வாழும் இரு மாநில மக்களை மோத விடும் தன்மை கொண்டது. ஏற்கெனவே பொதுப்பணித் துறை  அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத் திற்கும், வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமாருக்கும், மழை - வெள்ளக் காலத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதை பற்றிய சட்டவிதிகள் தெரியாதா? தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு அதிக நீர்வரத்து இருந்த நிலையில், வெள்ளச் சூழலை அறிந்து, மொத்தமாக தேக்கி வைத்து நிலைமை மோசமாகும் போது திறந்துவிட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, படிப்படியாக வெளியேற்ற வேண்டும் என தமிழக அரசை கேரள அரசு கேட்டுக் கொண்டது. அந்த அடிப் படையிலேயே முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இடுக்கி அணையில் தேக்கி வைக்கப் பட்டுள்ளது.

திறந்துவிடப்படுகிற தண்ணீரை இடுக்கி அணையில் தேக்கி வைக்கும் ஏற்பாடு அங்கு உள்ளது. ஆனால் தமிழ கத்தில், மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படுகிற உபரி நீர் எவ்வித பயனும் இல்லாமல் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற வெள்ளக் காலத்தில் கிடைக்கும் உபரி நீரையும், மழை நீரையும் சேமித்து வைப்பதற்கான தொலைநோக்கு திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாகவும், வட மாவட்டங்களில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீரை சேமிப்பதன் மூலமும் நிரந்தர தீர்வு காண முடியும். 2003 மின்சார சட்டத் திருத்த மசோதா வை கொண்டு வரக் கூடாது என எதிர்க்கட்சி களும், மாநில அரசுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஒன்றிய பாஜக  அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதற்கு எதிராக நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இந்த மசோதாவை ஒன்றிய அரசு முற்றாக கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் வீ.மாரிமுத்து, எம்.முருகையன் ஆகி யோர் உடனிருந்தனர்.        (ந.நி.)

;