tamilnadu

img

ஊழல் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் சீர் குலைக்கிறது - உயர்நீதிமன்றம் 

ஊழல் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் சீர் குலைத்து வருவதாக  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களை கண்காணிக்கச் சிறப்பு பறக்கும் படையை அமைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், அரசுப் பணியில் சேர்வது முதல் இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வு வரை ஊழல் மற்றும் லஞ்சம் பெருமளவில் காணப்படுகிறது. அரசு அதிகாரிகள் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கும்போது தங்களது மூத்த அதிகாரிகளிடம் உரியத் தகவலை வழங்க வேண்டும். வீடு கட்டுவது, விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்குக் கூட உயர் அதிகாரிகளிடம் உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அனுப்பப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கோ, அலுவலருக்கோ அனுப்பப்படக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி துரைசுவாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ஊழல் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் சீர் குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த விவகாரம் ஆழமானது. சாதாரண மனிதர்களும் எளிமையானது என்பதால் குறுக்கு வழியை ஊக்குவிக்கின்றனர் எனக் கருத்து தெரிவித்தனர். மேலும், வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும், வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

;