tamilnadu

img

மதுரையில் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா.... ரயில்பெட்டிகளை பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்ப்பு....

மதுரை:
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனை,  தனியார் மருத்துவமனைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் படுக்கை வசதியும் தங்களுக்கும் ஆக்சிஜன் வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஓய்வு உறக்கமின்றி பணியாற்றி வருகின்றனர்.

மதுரையில் புதனன்று 914 பேருக்கும் செவ்வாயன்று 787 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையைப் பொறுத்தமட்டில் தொற்று பாதிப்பில் இது ஒரு புதிய உச்சமாகும்.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மாவட்ட, தாலுகா, தனியார் மருத்துவமனைகளில் 1,887 படுக்கைகள் உள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழக விடுதி- 500, மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி (கப்பலூர்)-200, உசிலம்பட்டியில் உள்ள ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளி-70, கிடாரிப்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி-70, கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி-70 உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை முகாம்களில் மொத்தம் 1,780 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 1,523 படுக்கைகள் உள்ளன. 1,263 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். மொத்தம் 5,390 படுக்கைகளே உள்ளன. மே 5-ஆம் தேதி நிலவரப்படி 4,846 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தப் படுக்கைகளை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ஒப்பிட்டால் 544 படுக்கைகள் மட்டும் காலியாக உள்ளன.

இந்தச் சூழ்நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் “மருத்துவ அவசர நிலை” என்ற தன்மையில் செயல்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரயில் பெட்டிகள்
குறிப்பாக மதுரை சமயநல்லூர் ரயில் நிலையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கென அனைத்து வசதிகளுடன் கூடிய 20 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. இதில் ஒரு பெட்டிக்கு 16 படுக்கைகள் உள்ளன. ஒரு மருத்துவர் அறை, மூன்று கழிப்பறை, ஒரு குளியலறை வசதியும் உள்ளது.மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரயில்வே நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மதுரை மாவட்டத்தின்தேவை கருதி சமயநல்லூரில் உள்ள ரயில் பெட்டிகளை உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். முதற்கட்டமாக அறிகுறியற்றவர்களை இந்த ரயில் பெட்டிகளுக்கு மாற்றலாம்.

போக்குவரத்து நெரிசல்
மதுரை கொரோனா தடுப்பு, உயிர்காப்பு சிகிச்சைப்பிரிவில் ஏராளமானோர் அனுதிமதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை பார்க்க வந்துள்ளவர்கள் மருத்துவமனை அமைந்துள்ள சாலையின் இருபுறமும் ஏராளமான இரு சக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளனர். தவிர பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஆம்புலன்ஸ் செல்வது, வருவது, ஆட்டோக்களில் சிகிச்சைக்கு வந்து செல்பவர்களால் அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

காவலர் உயிரிழப்பு
மதுரை நகர் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றுபவர் ஏ.பரமசாமி (48) இவர் கொரோனா காரணமாக திருமங்கலத்தில் உயிரிழந்தார். நெஞ்சகப் பிரச்சனை காரணமாக கடந்த 27-ஆம் தேதி அவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா முதல் அலையிலும் இவர் பாதிக்கப்பட்டார். இரண்டாவது அலை பரவலில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டார். மதுரையில் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலைக்கு இதுவரை காவல்துறையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். முதல் அலையில் மூன்று காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையில், காவல்துறை ஆணையாளர்பிரேம் ஆனந்த் சின்ஹா ​​ கூறுகையில்,   “காவல்துறை யில் தீவிர நோயுற்றவர்கள், கர்ப்பிணிப் பணியாளர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார். 

மதுரை மாவட்டத்தின் உடனடித்தேவைகள்
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் முன்களப் பணியாளர்களுக்கு முகக்கவசம் தட்டுப்பாடு உள்ளது. கொரோனா முதல் அலையின் போது தமிழக மருத்துவ சேவைக்கழகம் மூலம் வரவழைக்கப்பட்ட முகக்கவசங்கள் இருப்பில் இருந்ததால் அதைப் பயன்படுத்தி வருகின்றனர். டிசம்பருக்குப்பின் முகக்கவசங்கள் வழங்கப்படவில்லையாம். உடனடியாக முகக்கவசங்கள் அரசு இராஜாஜி மருத்துவமனைக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் மருத்துக்கல்லூரியின் மருந்தியல் கல்லூரியில் சானிடைசர் தயாரிக்கப்பட்டு இலவசமாக மருத்துவமனைகள், அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டது. அந்தப் பணியை மீண்டும் தொடங்கவேண்டும்.

முன்களப் பணியாளர் நிலை
மதுரை அரசு மருத்துவமனையில் சுமார் 100 தொழில் நுட்பனர்கள்-உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிலர் நலம் பெற்றுள்ளனர். முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.அதே போல் மாவட்ட தலைமை மருத்துவமனை உசிலம்பட்டியில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில்  பேரையூர், திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான் அரசு மருத்துவமனைகள் உள்ளன.இங்கு குறைந்தது ஆக்சிஜனுடன் கூடிய 100 படுக்கைகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். மாவட்ட தலைமை மருத்துவமனையான உசிலம்பட்டியில் தொற்றாளர்கள் என உறுதிசெய்யப்படுபவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். அறிகுறியற்றவர்கள் இங்குள்ள தனியார் பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனாவிற்கு பலியான முன்களப் பணியாளர்
கடந்த நான்கு தினங்களுக்கு முன் மதுரை அரசுஇராஜாஜி மருத்துவமனை யின் அலுவலகக் கண்காணிப்பாளர் மகேஷ் (54) என்ற முன்களப்பணியாளர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்து வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் வியாழன் காலை உயிரிழந்தார்.

;