விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், சாஜி போன்றோர் நடிப்பில் இளையராஜா யுவன்சங்கர்ராஜா இசையில் போன ஆண்டு வெளியான இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய திரைப்படம் ‘மாமனிதன்’. தற்பொழுது ஆகா ஓ.டி.டி தளத்தில் திரைப்படம் காணக் கிடைக்கிறது. மதங்கள் கடந்த மனித நேயத்தை மிகுந்த அழகியல் அம்சத்தோடு வாழ்வி லிருந்து பெறப்பட்ட திரைக்கதையோடு வெளியான ‘மாமனிதன்’, ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பட விழாவில் பங்கேற்று 52 விருதுகளை பெற்றிருக்கிறது. இம்மாதம் ஏப்ரல் 20 -24 நாட்களில் மாஸ்கோ நகரில் நடைபெறும் 45 ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் மாமனிதன் பங்கேற்கிறது. சோபியா லாரன்ஸ்,எலிசபெத் டெய்லர்,கிம் கிடுக் போன்ற உலகின் பெரும் திரைப்பட ஆளுமைகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட விழாவில் இந்தாண்டு விருந்தினராக மாமனிதன் படத்தோடு இயக்குநர் சீனுராமசாமி பங்கேற்க ரஷ்ய அரசால் அழைக்கப் பட்டிருக்கிறார். திரைக்கதைவழியாக நாடுகளின் மாநிலத்தின் பண்பாட்டு போக்குகளை உணர்த்தும் மாமனிதன் என ரஷ்ய அரசால் அங்கீகரிக்கப்பட்டு திரைப்பட விழாவில் பங்கேற்கும் இயக்குநர் சீனு ராமசாமியை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட கலைஇரவுக் குழு சார்பாக மாநிலப் பொருளாளர் சைதை ஜெ, மேனாள் மாநில நிர்வாகி இரா.தெ.முத்து,மு.சாலா, மனோகரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்தினர்.