tamilnadu

img

உப்பளத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் பெற நடவடிக்கை எடுத்திடுக!

தொழில்துறை அமைச்சருக்கு கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை

கடலூர்,செப்.26- பெரும்பான்மையான  உப்பளத் தொழிலாளர்கள் மழைக்கால நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு  கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மனு அளித்துள்ளது. இந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு: தமிழக அரசு உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டொன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த அறிவிப்பில் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் பதிந்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி எனில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களால் இந்த திட்டத்தின் பலனை பெற இயலாத சூழல் ஏற்படும் என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.  ஒன்றிய அரசின் உப்பு இலாகா வெளியிடும் ஆண்டறிக்கையின் படியே தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டில் தோராயமாக 21,528 தொழிலாளர்கள் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் கள நிலவரப்படி தூத்துக்குடியில் மட்டுமே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், வேதாரண்யத்தில் 10 ஆயிரம் மற்றும் மரக்காணத்தில் 6 ஆயிரம் தொழிலாளர்களும் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பல்வேறு காரணங்களினால் தமிழகம் முழுவதிலும் இருந்து நலவாரியத்தில் தூத்துக்குடி 3810, மரக்காணம் 500, வேதாரண்யம் 50 என மொத்தம் 4360 தொழிலாளர்களே பதிந்துள்ளனர். எனவே இதற்கான அரசாணை வகுக்கும் பொழுது அரசின் இந்த நல்லெண்ண திட்டத்தின் மூலம் பெரும்பான்மையான உப்பள தொழிலாளர்கள் பயன் பெரும் வகையில் அமைந்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .     பெரும்பான்மையான உப்பள தொழிலாளர்களை உள்ளடக்கி இந்த திட்டத்தினை சிறப்புற செயல்படுத்த கீழ்க்கண்ட சில பரிந்துரைகளை தங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்.

தமிழகத்தில் உப்பள தொழில் பிரதானமாக நடைபெறும் இடங்களான தூத்துக்குடி, வேதாரண்யம், மற்றும் மரக்காணம் பகுதிகளில் உள்ள உப்பள தொழிலுக்கான கூட்டுறவு சங்கங்களின் மூலம் பயனாளர்களை அடையாளம் காண்பது. தற்போது வரை நலவாரியத்தில்  உறுப்பினர் ஆகாத உப்பள தொழிலாளர்கள் தங்களை உறுப்பினராக்கிக் கொள்ள உறுப்பினர் பதிவு முகாம்கள் நடத்தியும் அதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதம் அவகாசம் வழங்கியும் அவர்களை  இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற செய்வது. மேற்கண்ட ஆலோசனைகளை தாங்கள் கணக்கில் கொண்டு உப்பள தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாத்திட ஆவன செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி  மூலம் அமைச்சரிடம் நேரில் வழங்கப்பட்டது.

;