tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

 சென்னை, அக்.23- சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 6-வது தெருவை சேர்ந்த கணேஷ் ராமன் என்பவரது மனைவி ஷோபனா வீட்டில் பழைய பொருட்களுடன் 12 பவுன் தங்க நாணயத்தையும் தெரியாமல்  குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். திருவொற்றியூர் மண்டலத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மை பணியாளர்  மேரி கையில் இந்த தங்க நாணயம் கிடைத்தது. அவர், நேர்மை யாக சாத்தாங்காடு காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி யிடம் ஒப்படைத்தார். மேரியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் அவரை பாராட்டி தமிழக அரசின் தலைமை  செயலாளர் இறையன்பு தன் கைப்பட கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அன்புள்ள மேரிக்கு வணக்கம். தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பை யில் கிடந்த தங்கத்தை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த  உங்கள் நேர்மையின் காரணமாக உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகளெல்லாம் நேர் வழிகளை காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்றாக உள்ளீர்கள். வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வண்ணான் குளம் பெயர் மாற்றம்

சென்னை, அக்.23- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் மண்டலம், வார்டு 82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு 82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 192ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஊதியத்துடன் விடுப்பு: ஸ்விகி

சென்னை,செப்.23- ஸ்விகி நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 24 நாட்களுக்கு விடுப்பு வழங்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும்  பணியை ஸ்விகி நிறுவனம் வணிகரீதியில் செய்து வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், உணவு விநியோகம் செய்யும் பிரிவில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கி றது. இதனை கருத்தில் கொண்டு, பெண்களை பணியில் சேர ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்விகி பல்வேறு வசதிகளையும், திட்ட கொள்கைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் ஊழியர்கள் அசவுகரியமாக உணரும்  தங்களின் மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் ஆண்டுக்கு  24 நாட்களுக்கு விடுப்பு கிடைக்கும் என ஸ்விகி அறிவித்துள்ளது.

காலமானார்

சென்னை, அக். 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்ஜிஆர் நகர் மேற்கு கிளை உறுப்பினர் ஏ.நடராஜனின், சிஐடியு தென்சென்னை மாவட்ட நிர்வாகி டி.சாந்தி ஆகி யோரின் தாயார் ஏ.சியா மளா (வயது 78) உடல்  நலக்குறைவால் சனிக்கிழ மையன்று (அக்.23) கால மானார். எம்ஜிஆர் நகரில் உள்ள இல்லத்தில் வைக் கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல் முருகன், தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், பா.பால கிருஷ்ணன், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் நெசப்பாக்கம் இடு காட்டில் அடக்கம் செய்யப் பட்டது.

மலர் மருத்துவமனையில் ஊதிய ஒப்பந்தம்

சென்னை, அக். 23 - போர்டிஸ் மலர் மருத்துவமனை ஊழியர் சங்கம் மருத்துவமனை நிறுவனத்துடன் 2020-2021ஆம் ஆண்டுக்கான போனஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. தொழிற்சங்கம் தரப்பில் 20 விழுக்காடு போனஸ் வலியு றுத்திய நிலையில் நிர்வாகம் 19விழுக்காடு தர ஒப்புக் கொண்டது. இதன்படி குறைந்த பட்சம் 35 ஆயிரம் ரூபாய்  முதல் 65,000 வரை போனசும் மற்றும் கருணைத் தொகை யையும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும். பேச்சு வார்த்தையில் சங்கத்தின் சார்பில் பொது செயலா ளர் ஆர்.ரவி, செயல் தலைவர் எம்.இன்பரசி, பொருளாளர் கே.சி.மோகன்சிங், நிறுவனத்தின் சார்பில் பெஸிலிட்டி இயக்குநர் நாகேஸ்வரன், மனித வள மேம்பாட்டு துறை தலைமை மேலாளர் டி.செல்வமும் கலந்து கொண்டனர்.


 

;