tamilnadu

img

...ஏனென்றால், நாங்கள் தோழர்கள்!

அய்யன் கொல்லி கிராமத்தில் தோழர்களால் அமைக்கப்பட்ட புதிய வீட்டை பெற்றிருக்கும் பாப்பச்சனும் லீலாவும்.

தமிழகத்தின் எல்லைப் பகுதி யில் கேரளாவிற்கு அருகில் அமைந்துள்ளது அய்யன் கொல்லி எனும் குக்கிராமம். பெரும்பாலும் வனப்பகுதிகளையும், இதர நிலப்பரப்பில் தேயிலை, காபி, மிளகு, ஏலம் உள்ளிட்ட விவசாய நிலங்களையும் உள்ளடக்கிய பகுதி இது. சூரிய ஒளி மறைந்து இருள் பரவத் தொடங்கும் அந்த கணத்திலேயே மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள் முடங்கி விடுவார்கள். ஏனெனில் யானை கள் உள்ளிட்ட வனவிலங்குகள் மிகச்  சாதாரணமாக குடியிருப்பு பகுதி களுக்குள் வரத் துவங்கிவிடும். யானை தாக்குதலால் நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் இப்பகுதியைச் சார்ந்தவர்களே.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் இப்பகுதியில் பழங்குடியினர் உள்ளிட்ட ஏழை மக்களுக்காக பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் உதவிகளை வழங்குவதற்காக அந்த வீட்டுக்கும் செல்கின்றனர். அதை வீடு என்று சொல்லிவிட முடியாது. நான்கு புறமும் இரண்டரை அடி செங்கற்களாலான சுவற்றின் மீது கிடைத்த சருகு களையும், தகரங்களையும் சாத்தி  வைத்துக் கொண்டு. அதை வீடென நினைத்து, அதற்குள்ளாக வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள் 68 வயதான பாப்பச்சனும், 62 வயதான அவரது  மனைவி லீலாவும்.  உடல் ஆரோக்கி யத்துடன் ஒரு தொழிலாளியாக வேலை க்கு சென்று வந்த பாப்பச்சனுக்கு கடுமை யான ஆஸ்துமா நோய் பாதிக்கப்பட்ட நிலையில் படுத்த படுக்கையாகிப் போகிறார். எந்த வேலைக்கும் அவரால் செல்ல முடியாத நிலை. அவரது மனைவி லீலாவோ தேசிய ஊரக வேலை திட்டத்தில் கிடைக்கும் வேலையைச் செய்கிறார். ஆனால் இந்த  பொது முடக்க காலத்தில் 55 வயதுக்கு மேலானவர்கள் அத்திட்டத்தில் பணி யாற்ற விதிக்கப்பட்டுள்ள தடையால் அவராலும் வேலைக்கு செல்ல முடிய வில்லை. கிடைத்து வந்த கூலியும் இல்லா மல் போகிறது. அவர்களது மூன்று பெண் பிள்ளைகளும் திருமணமாகி சென்று விட்டனர். முதுமையும் ஏழ்மையும் சேர துயரம் தோய்ந்த வாழ்வு அவர்களை சூழ்ந்து கொள்கிறது. 

உதவிப் பொருட்களை அவர்களிடம் வழங்கிய பின்னர், அவர்களின் நிலை உணர்ந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் அங்கேயே ஒரு முடிவு செய்கின்றனர். அந்த வீட்டை மறு நிர்மாணம் செய்வதற்கான திட்டம்  உருவாகிறது. பொருட்கள் சேகரிப்ப தற்கும், நிதியைத் திரட்டுவதற்குமான ஆலோசனைகள் விரைவாக செயல்  வடிவம் பெறுகின்றன. அப்பகுதியின் கட்சி உறுப்பினர்களின் முன்முயற்சி யோடும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.யோஹண்ணன் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் அச்சுதன் மாஸ்டர் ஆகியோர் ஒருங்கிணைப்பிலும் உதவிகள் கோரப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள  “RED ARMY” எனும் சமூக வலைத்தளக்குழுவிலும் தோழர்கள் செய்திகளை பகிர்கின்றனர்.  புதியதொரு வீட்டை கட்டுவதற்கான உதவிகள் நிதியாகவும், பொருட்களாகவும் கிடைக்கின்றன. மூன்றே மாதங்களில் ரூபாய் ஆறரை லட்சத்தில் புதியதொரு வீட்டைக் கட்டி அதற்கு “அன்பு இல்லம்” என பெயர் வைத்து ஏழைத் தொழிலாளர்களான பாப்பச்சன் - லீலா தம்பதியினரிடம் ஒப்படைத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 

அய்யன்கொல்லி கிராமம் உள்ளிட்ட பல கிராமங்கள் அமைந்தி ருக்கும் சேரங்கோடு ஊராட்சிதான் தமிழகத்திலேயே மிகப்பெரியது. சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட இவ்வூராட்சியின் தலைவராகத்தான் மறைந்த தோழர். பெ.தமிழ்மணி அவர்கள் பணியாற்றினார். தற்போது சேரங்கோடு ஊராட்சி பகுதியில் உள்ள  மாவட்ட கவுன்சிலர் வார்டிலும், இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டுகளிலும், நான்கு ஊராட்சி வார்டுகளிலும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது. அதே மக்களோடு எல்லா நேரங்களிலும் இணைந்து நிற்பது எனும் தோழர்களின் அணுகு முறையால் தான் இத்தகைய தேர்தல்  வெற்றிகளும் கூட சாத்தியமாகின்றன. இந்த வார்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட  ஊராட்சி உறுப்பினரான எம்.எம்.ஹனீபா மாஸ்டரும், ஒன்றிய கவுன்சிலர்களும் இந்த வீட்டை புதுப்பிப்பதற்கான பணிகளில் தோழர் களோடு இணைந்து நின்றார்கள். ஏற்கனவே ஒரு முறை ஏற்பட்ட கடுமையான வெள்ளச் சேதங்களால், இவ்வூராட்சிக்குட்பட்ட சேரம்பாடி கண்ணன்வயல் பகுதியில் ஆறு பழங்குடி மக்களின் வீடுகள் முற்றாக இடிந்த போது, எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தினரின் உதவியோடு அவற்றை முழுமையாக புனரமைத்தும் அளித்திருக்கிறார்கள் இப்பகுதி தோழர்கள். எளிய மக்களின் கோரிக்கைகளுக்காக போராடுவது, கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது ஆகிய பணிகளோடு கட்சியும் தனது பங்கிற்கு உதவிக்கரம் நீட்டுவது எனும்  பன்முகத் தன்மையோடு இயங்கும் தோழர்களால், இத்தகைய முயற்சி களுக்கு செயல்வடிவம் கிடைக்கின்றன. சமூகத்தை நேசிக்கிற தோழமையை விட இவ்வுலகில் சிறப்பானது என வேறெதுவும் இருக்க முடியுமா!

கே.ராஜன், நீலகிரி மாவட்ட
செயற்குழு உறுப்பினர், சிபிஐ (எம்)

 

;