tamilnadu

img

அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரின் கடமை

புகழ்பெற்ற பீமா கோரேகான் வழக்கில் கேலிக்கிடமாகும் குற்றச்சாட்டுகளின் கீழ் ஆனந்த் கைது செய்யப்பட்டு டலோஜா சிறையில் உள்ளார். தனக்கு எதிரான குரல்களை அமைதியாக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தும் ஒரே வழிமுறை இதுதான் என்று தெரிகிறது. தனது கார்ப்பரேட் உலகின் அலுவல் வாழ்க்கையில் உச்சத்தை அடைந்த பின்னரும் கூட ஆனந்த் ஓயவில்லை. காலம் காலமாக சமூக அமைப்பின் பெருந்தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட தலித்துகள், ஆதிவாசிகள், ஓரம்கட்டப்பட்டவர்கள் ஆகியோருக்காக ஆனந்த் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

அவர்களின் உரிமைகளுக்காக போராடுவதையும் தொடர்ந்து செய்து வந்தார். தனது பல்வேறு உரைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்ட எழுத்துக்கள் மூலம் தனது கற்றுத் தேர்ந்த நுட்பமான அறிவாற்றலை அவர்  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்து வந்தார். இதற்காக அவர் 2020 ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து கடந்த 18 மாதங்களுக்கும் மேல் சிறையில் கைதியாக இருக்கிறார். அவர் அம்பேத்கர் பிறந்தநாளில் சரணடைந்தார் என்பது சமூகத்தின் முரணை புலப்படுத்துவதே ஆகும்.  

பல்வேறு நீதிமன்றங்களில், எங்களது வழக்கறிஞர் குழுவால் சட்ட ரீதியான போராட்டம் சமரசமற்ற வகையில் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், பொய்யாக புனையப்பட்ட இந்த சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஆனந்த் மற்றும் பிறரின் நிபந்தனையற்ற விடுதலையை ஒன்றுபட்ட குரலில் கேட்பது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களால் இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரின் கடமையாகும். ஆனந்தின் நீதிக்கான எங்களின் போராட்டத்தில் ஒன்றிணைந்து எங்களோடு இணைந்து நிற்கும் “மனிதச் சங்கிலிப் போராட்ட அமைப்பாளர்களுக்கு (பீமா கோரே கான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம்) என்னுடைய மனமார்ந்த நன்றிகள். பீமா கோரேகான் சதி வழக்கில்  மோடி அரசால் பொய்வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 செயற்பாட்டாளர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தில் செப்டம்பர் 15 புதனன்று மாபெரும் மனிதச்சங்கிலி இயக்கம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை வாழ்த்தி, ரமா அம்பேத்கர் அனுப்பிய செய்தி இது. அண்ணல் அம்பேத்கரின் பேத்தியான ரமா, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அறிஞரும் செயற்பாட்டாளருமான பேரா. ஆனந்த் டெல்டும்டேயின் இணையர் ஆவார்.

;