tamilnadu

img

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும் - தமிழக அரசு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிரந்தர கட்டிடம் கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கவும், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நோயாளிகள் பிரிவைத் தொடங்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். 

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் கட்டமாக 150 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்குவது, வெளி நோயாளிகள் பிரிவு ஆரம்பிப்பது தொடர்பான மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து ஜூலை 16- ல் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை, வெளி நோயாளிகள் பிரிவு தொடங்குவது குறித்து எடுக்கப்படும் முடிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 26 க்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும், மதுரை, தேனி, திண்டுக்கல் மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் அருகிலிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவர். எய்ம்ஸ் நிர்வாகத்தில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனை ஏற்ற நீதிபதிகள், 2 நாட்களுக்குள்ளாகத் தமிழக அரசின் பதில் மனுவை மத்திய அரசு வழக்கறிஞருக்கு வழங்கவும், மத்திய அரசு பதிலளிக்கவும்  உத்தரவிட்டு  வழக்கை ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

;