tamilnadu

ஆதி திராவிடர்,பழங்குடியினர் ஆணையம் தமிழக அரசு சரி செய்ய வேண்டியவை - பெ.சண்முகம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் என்ற அமைப்பினை தமிழ்நாடு அரசு சமீபத்தில் அமைத்துள்ளது. இதற்கென்று ஒரு சட்ட மும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய  பட்டியல் சாதியினர் ஆணையம், தேசிய பழங்குடியினர் ஆணையம் அகில இந்திய அளவில் அமைக்கப்பட்டுள் ளது. 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாநில அளவிலான ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின் றன. தமிழ்நாட்டில் இப்படியொரு ஆணையம் அமைக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஆணையம் பட்டி யல் சாதியினர் மற்றும் பழங்குடி மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வை நோக்கி பயணிக்கக்கூடிய ஒன்றாகவும், அரசு அத்தகைய திசைவழியில் செயல்படுவ தற்கான உந்துதலை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டுமென்பதே அனைவருடைய எதிர்ப்பார்ப்பும்.  ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர், உறுப் பினர்கள் குறித்த பட்டியலை தமிழக அரசு சமீபத்தில் வெளி யிட்டது. அந்தப் பட்டியலை இன்னும் சிறந்த, செயலூக்க மிக்க நபர்களை கொண்டதாக தேர்ந்தெடுத்திருக்கலாம். மாநில அளவில் களஅனுபவம் கொண்ட ஒருவர் கூட அதில் இடம் பெறவில்லை. மேலும் மானிடவியல் வல்லுநர் ஒரு வரை இணைத்திருக்கலாம் என்பது நமது கருத்து. ஐந்தில் ஒருவர் பழங்குடியினத்தவராகவும், ஐந்தில் ஒருவர் பெண் பிரதிநிதியாகவும் இருக்க வேண்டுமென்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை தேர்ந் தெடுத்ததன் மூலம் பழங்குடியினத்திலிருந்து ஒரு ஆண்  இடம்பெற வாய்ப்பில்லாத சூழலை அரசு ஏற்படுத்தி விட்டது. தமிழ்நாடு ஆணையத்தில் இடம் பெறுபவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த பழங்குடி இனத்தவராக இருந்திருக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் பிறந்த லீலாவதி அவர்களை எந்த அடிப்படையில் அரசு தேர்வு செய்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது.  பழங்குடி பிரதிநிதியாக ஒருவர் மட்டும் தான் அதில் இடம் பெற முடியும் என்ற நிலையில் மாநிலம் முழுவது முள்ள 36 பிரிவு பழங்குடி மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வகையிலான ஒருவரை உறுப்பினராக நியமித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆணை யத்தில் பழங்குடி மக்களின் பிரச்சனைகள் முக்கியத்துவம் பெற முடியாத ஒரு நிலையை அரசு இதன் மூலம் ஏற்படுத்தி யுள்ளது. உறுப்பினர்களில் தலைவருக்கு 70 வயது என்றும் உறுப்பினர்களுக்கு 65 வயது வரை என்றும் வயது வரம்பு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது அவசிய மில்லாதது. மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் ஒருவர், ஆரோக்கியமாக இருப்பாரென்றால் அத்தகைய வர்களுடைய சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையை இது உருவாக்கும். 

ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அரசின் விருப்பத் திற்கு உட்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மிகாது பதவி வகித் தல் வேண்டுமென்றும் இரண்டாவது முறை மறுபணி யமர்த்தத்திற்கு தகுதியுடையவராயிருத்தல் வேண்டு மென்றும் (4-(1)) குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு வெளிப்படுத்தும் செய்தி என்ன? நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தங்களின் பணிக்காலத்தில் ஆணை யத்தின் நோக்கத்திற்கேற்ப செயல்படுவதன் மூலம் இரண்டாவது முறை பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். அல்லது அரசு எதை விரும்புகிறதோ அதை பரிந்துரையாக கொடுப்பதன் மூலம், அரசின் மனங்கோணா மல் நடந்து கொள்வதன் மூலம் இரண்டாவது முறை பணியமர்த்தும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.  இத்தகைய சந்தேகம் எழுவதை தவிர்க்க முடிய வில்லை. இரண்டாவது முறை பணியமர்த்தும் தகுதியுடை யவராய் என்பது அவசியமில்லாமல் சட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. இது தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று. 

அடுத்து, ஆணையம் அமைக்கப்படுவதன் நோக்க மாக இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனைப் பாதுகாத்திட மற்றும் அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்வைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இந்த நோக்கத்திற்காக தேவைப்படலாகும் அத்தகைய அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகளுடன் ஆணையத்தை அமைத்து உரு வாக்க அரசானது முடிவு செய்துள்ளது” என்று. ஆனால், ஆணையத்தின் செயற்பணிகள் என்ற அத்தியாயத்தில் இப்படிப்பட்ட பரந்த நோக்கத்தோடு ஆணையத்திற்கான பணிகள் தீர்மானிக்கப்படவில்லை என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அத்தியாயம் IIIல் ஆணையத்தின் செயற்பணிகள் என்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், பிரதானமாக, 1955ஆம் ஆண்டு குடியியல் உரிமைகள் பாது காப்புச் சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989இன் படி வரும் புகாரினை விசாரித்தல், பட்டியல் சாதி மற்றும் பழங்குடி யினர் நலன் தொடர்பான விஷயங்களில் பொதுப்பணி யாளர் கவனக்குறைவு அல்லது அக்கறையின்றி இருத்தல் போன்ற விஷயங்கள் மேற்படி சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தல், இம்மக்கள் நலன் சார்ந்து அரசு எடுக்கவேண்டிய  நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குதல், இம்மக்களிட மிருந்து வரும் புகார்களை விசாரித்தல் போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வரும் புகார்களை விசாரிக்க காவல்துறை இருக்கிறது. அதில் குறைபாடுகள் இருந்தாலும் காவல்துறைதான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும், எனவே. இந்த விஷயத்தில் ஆணையம் தலையிட்டாலும் பரிந்துரைகளைத் தான் கொடுக்க முடியுமே தவிர நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, ஆணையத்தின் பணிகள், அதிகாரங்கள் விரிவு படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இதனால் எதிர் பார்த்த பலன் கிடைக்காது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். 

எனவே, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பாக ஆணையத்தின் கவனத்திற்கு வரும் அனைத்துப் பிரச்சனைகளின் மீதும் ஆணையம் தலை யிடும். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளும் என்ற வகையில் மாற்றினால் தான் இந்த ஆணையத்தால் பலன் ஏற்படும். எனவே இந்த ஆணையத்திற்கான விதிகள் உருவாக்கப் படும் போது அரசு இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டு மென்பது நமது வேண்டுகோள். உறுப்பினர்கள் நியமனத்தி லும் பொருத்தமான மாறுதல் செய்து குறைகளை சரி செய்ய முன்வர வேண்டும். 

;