tamilnadu

img

பிரஞ்சு நாவலைப் படமாக்கிய ஒரு வெற்றி அனுபவம்...

ஏழை படும் பாடு

1950 ஆம் ஆண்டில் அது ஒரு தீபாவளி நாள். “உணர்ச்சியை ஊட்டும்... உள்ளத்தை உருக்கும்...” - என்றும், “சென்னை காஸினோ, கிரௌன் மற்றும் பல முக்கிய இடங்களிலும்...” - என்றும் வாசகங்களுடன் பார்ப்போரை ஈர்க்கும் வண்ணம் தமிழகமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரு தமிழ் சினிமா விளம்பரச் சுவரொட்டிதான் அது. அந்தப் படத்தின் பெயர் “ஏழை படும் பாடு”.  சுவரொட்டியின் மேலே பெரிய எழுத்தில் ‘தீபாவளி வெளியீடு’ என்றும் இருந்தது. இந்தச் சுவரொட்டி ஏற்படுத்திய ஈர்ப்புக்கு ஒரு முக்கியக் காரணமும் இருந்தது. அது வேறொன்றுமல்ல... தமிழ் சினிமா வரலாற்றிலேயே தீபாவளிப் பண்டிகையன்று ஒரு படம் வெளியாவது அதுதான் முதன்முறை. எனவே அது எங்கும் பரவிநின்று இப்படியானதொரு பரபரப்பை அந்தச் செய்தி ஏற்படுத்தியது. 

ஏழை படும் பாடு படத்தின் கதை இதுதான்: ‘மிகவும் கண்டிப்பானவர் என்று பெயர் வாங்கிய இன்ஸ்பெக்டர் ஜாவர்ட் ஒரு முரட்டுப் போலீஸ்காரரும்கூட. கந்தன் சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளி. தப்பியோடிய அவனை போலீஸ் தீவிரமாகத் தேடுகிற நிலையில் ஒரு கிறிஸ்தவப் பேராயர் அடைக்கலம் தந்து நல்வழிப்படுத்துகிறார். மனமாற்றமடைந்த கந்தன் ஒரு கண்ணாடித் தொழிற்கூடத்தை நிறுவி, முன்னேறி ஊரில் ஒரு பெரிய மனிதராக உயர்கிறான்.  தன் பழைய தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஒரு புதிய வாழ்க்கை வாழும் கந்தன், அவன் வசிக்கும் நகரத்திற்கு மேயர் ஆகிவிடுகிறான். இந்நிலையில் அந்த முரட்டுக் காவல் அதிகாரி ஜாவர்ட்டுக்கு கந்தனின்மீது சந்தேகம் வருகிறது. அவன் பழைய குற்றவாளிதான் என்பதை அறிந்து, அவனை அம்பலப்படுத்தப்போவதாக மிரட்டுகிறார்.  நிலைமை இப்படியிருக்க ஒரு சந்தர்ப்பத்தில் ஜாவர்ட்டின் உயிரைக் காப்பாற்றுகிறான் கந்தன். அதனால் நன்றியுடன் கந்தன்மீதான தன் கருத்தை மாற்றிக்கொண்ட அந்தப் போலீஸ் அதிகாரி ஜாவர்ட் பழைய குற்றவாளியான அவனைச் சட்டத்தின்முன் நிறுத்த மனமின்றித் தற்கொலை செய்துகொள்கிறார்.’ 

இப்படியானதொரு மாறுபட்ட திரைக்கதையை அந்நாளிலேயே நம் தமிழ் சினிமா உருவாக்கியிருக்கிறது என்பது எவ்வளவு வியப்பாக இருக்கிறது. பிரபல பிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ எழுதிய நாவலான லே மிஸரபிள் நாவல்தான் இந்த ஏழை படும் பாடு திரைக்கதைக்கு மூலக்கதையாகும். ஹியூகோவின் நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்து சுத்தானந்த பாரதி எழுதிய கதையைத் தழுவித்தான் ஏழை படும் பாடு சினிமா திரைக்கு வந்தது. தணிகாசலம் எனும் இயற்பெயர் கொண்ட அந்நாளின் மிகப்பிரபலமான இளங்கோவன் வசனங்களை எழுதினார்.  தனது பட்சிராஜா ஸ்டூடியோசுக்காக ஸ்ரீராமுலு நாயுடு இந்தப் படத்தைத் தயாரித்தார். செருகளத்தூர் சாமா பேராயராகவும், சீத்தாராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாவர்ட் ஆகவும் நடித்த இந்தப்படத்தின் நாயகன் கந்தனாக சித்தூர் வி. நாகையா நடித்தார். கோபாலகிருஷ்ணன், பாலையா, டி.எஸ்.துரைராஜ், பத்மினி, லலிதா, எம்.என்.ராஜம் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.  ஜாவர்ட் எனும் காவல் அதிகாரி பாத்திரத்தில் திறம்பட நடித்த காரணத்தால் வெறும் சீத்தாராமன் என்றிருந்தவர் ஜாவர்ட் சீத்தாராமனாக அடையாளத்தோடு அழைக்கப்பட்டு, நாளடைவில் அவர் ஜாவர் சீத்தாராமன் ஆகிப்போனார். படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார். பாரதியின், 

 “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்” 

- என்ற பாடலை இந்தப் படத்தில் மனமுருகப் பாடியிருந்தார் பிரபல பாடகி எம்.எல்.வசந்தகுமாரி. படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள். பாரதி பாடலுடன் மீதமிருந்த ஏழு பாடல்களை கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தார். திருச்சி லோகநாதன், சித்தூர் வி.நாகையா, பி.ஏ.பெரியநாயகி, ராதா ஜெயலட்சுமி ஆகியோரும் படத்தில் பாடியிருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தினை ஒரே சமயத்தில் தெலுங்கிலும் பீத்தல பாட்லு என்ற பெயரில் படமாகியிருந்தார்கள். படத்தை கே.ராம்நாத் மிகவும் புதிய ரசனைக்குரியதாக இயக்கியிருந்தார். 1950 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வசூலிலும், விமரிசன ரீதியிலும் வெற்றிப்படமானது இந்த ஏழை படும் பாடு. மாறுபட்டதொரு கதையோடுகூடிய பிரஞ்சு நாவலொன்றைப் படமாக்கியதில் வெற்றியனுபவமாகத் தமிழ் சினிமா வரலாற்றில் இந்தப் படம் குறித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதே கதையைத் தழுவி, பல மாறுதல்களோடு வியட்நாம் வீடு சுந்தரத்தின் எழுத்தில், பி. மாதவன் இயக்கத்தில், நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்த படம்தான் ஞானஒளி (1972) என்பது பலரும் அறியாத ஒன்று. அதுமட்டுமல்ல... விக்டர் ஹியூகோவின் லே மிஸரபிள் நாவல் மேற்குலகில் அண்மைக் காலம்வரை பல்வேறு காலகட்டங்களில் குறிப்பிடத்தகுந்த 7 முக்கிய சினிமாக்களின் கருவாகியிருக்கிறது. 1935, 1952, 1982, 1998, 2012 என அது படமாகி வெளிவந்திருக்கிறது. 1935 வெளிவந்த படம் ஆஸ்கார் விருதினையும் வென்றிருக்கிறது. நாவல் (1862) வெளிவந்து 159 ஆண்டுகள் முடிந்து இப்போது 160 வது ஆண்டு பிறக்கிறது.

;