tamilnadu

img

குளத்தில் மூழ்கி பலியான சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை......

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே குளத்தில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கந்தர்வகோட்டை   தாலுகா சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கம்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குளம் உள்ளது. இக்குளத்தில் குளிப்பதற்காக சென்ற சொக்கம் பேட்டையைச் சேர்ந்த  பஞ்சமூர்த்தி மகன் விக்னேஷ்வரன்(7),   மற்றும் பிலாவிடுதியைச் சேர்ந்த உடையப்பன் மகள் நிவேதா (11)   ஆகிய இருவரும் கடந்த திங்கள்கிழமை குளிக்கும்போது சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் குடும்பத்தினரை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எம்.சின்னத்துரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், சிஐடியு போக்குவரத்துக்கு ஊழியர் சங்க மண்டலத் தலைவர் கே.கார்த்திக் கேயன், சங்கம்விடுதி ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் சாந்தி  உள்ளிட்டோர்புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் எம்.சின்னத்துரை, மிகவும் துயரகரமான இச்சம்பவம் மிகுந்த
அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆழம் நிறைந்த இக்குளத்தில் நான்குபுறமும் சுற்றுச்சுவரோ, பொதுமக்கள் குளிப்பதற்கு வசதியாக போதுமான படித்துறைகளோ இல்லை. குளமும் பலவருடமாக தூர்வாரப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாகவே சேற்றில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்துள்ளன.எனவே, அரசு உடனடியாக குளத்தின் நான்குபக்கமும் சுற்றுச்சுவரும், போதுமான அளவுக்கு படித்துறையும் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் வற்றியபிறகு குளமும் தூர்வாரப்பட வேண்டும்.மேலும், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும்,  அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும்  உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

;