tamilnadu

img

மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவைச் சிகிச்சையின்போது பெண் மரணம்... நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் சாலை மறியல்....

புதுக்கோட்டை:
தவறான அறுவைச் சிகிச்சையால் பெண் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலைமையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி ராணி (28). ராணி புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியில் பிறந்தவர். இவருக்கு, கடந்த 2018-ல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே, இவருக்கு ஒரு மகள் இருப்பதால் குடும்பக்கட்டுப்பாடும் செய்யப்பட்டது. இந்நிலையில், கைக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்த ராணிக்கு, கடந்தவாரம் வயிற்று வலி ஏற்பட்டது. இதனை யடுத்து புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தை உருவாகி இருப்பதாகவும், அதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமையன்று ராணிக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது, எதிர்பாராத விதமாக ராணி உயிரிழந்தார். இதற்குஉறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், ராணியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.கடந்த 2018-ல் அலட்சியமாக குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவக் குழுவினர் மற்றும் தற்போது அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் திங்கள்கிழமையன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தவறான அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் மாதர்சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.லோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப் பட்டது. இப்போராட்டத்தினால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

;