tamilnadu

img

இந்தப் பகாசுரன் நமக்கு தேவைதானா?

1960களில் போதை ஏற்படுத்தும் புகையிலையை மக்களிடையே பழக்கப்படுத்துவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள்-உலக முதலாளிகள் மேற்கொண்ட தந்திரங்கள் முக்கியமானவை. உலக மக்கள்தொகையை ஒரு பொருளுக்கு அடிமையாக்குவதன் மூலம்,எப்படி தங்கள் வருமானத்தை தொடர்ச்சியாகப் பெருக்குவது என்ற தந்திரத்தை அவர்கள்அப்போது கற்றுக் கொண்டார்கள். புகையிலையை பரவலாக்கி பழக்கமாகும் வரை, புகையிலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பொய் என்பது போன்ற ஒரு தோற்றத்தை, தங்களுக்குச் சார்பான விஞ்ஞானிகள் மூலம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து உருவாக்கினர். இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. என்ற இந்தியன் டொமாக்கோ கம்பெனி, அடிப்படையில் ஒரு புகையிலை நிறுவனமே.உலக புகையிலை உற்பத்தியில் சீனா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. புகையிலையை பயன்படுத்துவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2ஆவது இடத்தில் உள்ளது. உலக அளவில் புகையிலை பயிரிடுவதற்காக இரண்டு லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதில் இந்தியாவில் 42 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் புகையிலை பயிரிடப்படுகிறது. புகையிலை பயிரிடுதல், எரிபொருள், புதிய வகை பயிர்கள் பயிரிடுதல், “பேக்” செய்வது ஆகியகாரணங்களுக்காக புகையிலை சார்ந்த காடழிப்பு நடைபெறுகிறது. இதற்காக பெரும்பாலான வளரும் நாடுகளில் காடுகள் அழிக்கப்படுவதால், உலக அளவில் 1.7 சதவீத காடுகளின் பரப்பு இதற்கு மட்டுமே அழிந்து வருகிறது. மொத்த காடுகளின் பரப்பளவில் 4.6 சதவீதம் புகையிலை பயிரிடப்படும் நாடுகளில் மட்டும் அழிக்கப்படுகிறது.சிகரெட், பீடி, மெல்லும் புகையிலை போன்றவற்றை தயாரிப்பதற்கு புகையிலை பயன்படுத்தப்படுகிறது. உலக பீடி உற்பத்தியில் 85 சதவீதம்,அதாவது 19 கோடி கிலோ பீடி இந்தியாவில் உற்பத்தியாகிறது. உலக புகையிலை பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33சதவீதம். (ஏழை பீடி தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம், குழந்தை உழைப்பு போன்ற வேறு சமூகப்பிரச்சனைகளும் இதில் அடங்கியுள்ளன). புகையிலை பண்ணைகளில் 20 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களும், பீடி-சிகரெட்பாக்கெட் தயாரிப்பு பணியில் 27 ஆயிரம்குழந்தை தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக அமைப்பின் பிரிவு தெரிவிக்கிறது.தமிழகத்தில் மெல்லும் வகை புகையிலை தென்மாவட்டங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. தவிர, தஞ்சாவூரிலும் கடற்பாங்கான மண்உள்ள பகுதிகளிலும் இவை பயிரிடப்படுகின்றன. மதுரையின் சில இடங்களில் குறைவான எரியும் தன்மை கொண்ட சுருட்டு தயாரிக்கப்பயன்படும் புகையிலை பயிரிடப்படுகிறது.

காட்டு வளம் பாதிப்பு
ஒரு டன் புகையிலையை பதப்படுத்துவதற்கு ஒரு ஹெக்டேர் மரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோ புகையிலையை பதப்படுத்துவதற்கு 7.8 கிலோ மரக்கட்டை எரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு ஏக்கர் புகையிலை பயிரிடுவது 150 மரங்களை அழிப்பதற்குச் சமமாகும். 600 கிலோ புகையிலையை பதப்படுத்த உதவும் எரிபொருளைக்கொண்டு 20 வீடுகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யலாம்.போபாலில் உள்ள இந்திய காட்டு மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 1962 முதல் 2002 வரையிலான 40ஆண்டு காலத்தில் புகையிலை பதப்படுத்துதல், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள்தயாரிப்புக்காக 680 சதுர கிலோ மீட்டர் காடுகள்அல்லது 86.8 கோடி டன் மரக்கட்டைகள் அல்லது 22 கோடி டன் கட்டுமானத் தரம் வாய்ந்த மரக்கட்டைகள் அல்லது 66.8 கோடி டன் எரிபொருள் சுரண்டப்பட்டுள்ளது.இவ்வாறு அழிக்கப்பட்ட எரிபொருளின் அளவைக் கணக்கிட்டால் அதைக் கொண்டு அனல் மின்நிலையம் ஒன்றை இயக்கி, தலைநகர் தில்லி, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஓர் ஆண்டுக்குத் தேவையான மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்திருக்கலாம். இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவில் மட்டும் சிகரெட்டை சுருட்டவும் பேக் செய்யவும் 4 மைல்தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. 300 சிகரெட்டுகள் தயாரிக்க ஒரு மரம் வெட்டப்படுகிறது.புகையிலையை பதப்படுத்த எரிபொருள் பற்றாக்குறை நிலவும் இடங்களில் புகையிலை பயிரின் தண்டுகளையே பயன்படுத்துவதால், அது தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஆந்திராவில் கோதாவரி பாசனப் பகுதியில் உள்ள வடிசலேறு கிராமத்தில்எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இங்கு வாழ்பவர்கள்காசநோய், கண்புரை போன்ற நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புகையிலை பயிரிடப்படாத ஒரு கிராமத்துடன் ஒப்பிட்டால் இது பல மடங்கு அதிகம்.

மண்ணரிப்பு
புகையிலை பொதுவாக வறண்ட, ஓரளவு வறண்ட நிலங்களில் பயிரிடப்படுகிறது. தனியாகப் பயிரிடப்படுவதால் புகையிலை பயிர் உயரமாக வளர்கிறது. இது மண்ணரிப்புக்குக் காரணமாக இருக்கும் காற்று, மழை இவற்றிலிருந்து வளமான மேல்மண்ணை பிடித்து வைத்துக் கொள்ளும் திறனற்றது. மற்ற பயிர்களோடு ஒப்பிட்டால், மண்ணின் ஊட்டச்சத்துகளை புகையிலை பயிர் பாதிக்கிறது. மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்துகளை இப்பயிர் அதிக அளவில் உறிஞ்சுகிறது. பொட்டாசியத்தை 6 மடங்கு அதிகமாக உறிஞ்சுகிறது. இதனால் அடிக்கடி உரம் இடுவது அவசியமாகிறது. மேலும் சுற்றுச்சூழலும் சீரழிகிறது.இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் வறண்ட நிலத்தில் பயிரிடப்படும் பயிர்களால் ஏற்படும் மண்ணரிப்பின் அளவைக்கணக்கிட்டது. புகையிலை பயிரால் ஒரு ஏக்கருக்கு 45 கிலோவுக்கு மேல் மண் அரிக்கப்படுகிறது. இதனால் ஊட்டச்சத்து, மண்ணின் நீர்தேக்கும் திறன், நீர் உறிஞ்சும் திறன் போன்றவை குறைவதுடன், மண்ணரிப்பும் அதிகரிக்கிறது.

பல்லுயிரியம் பாதிக்கப்படுதல்
ஒரு பகுதியில் புகையிலையை மட்டுமே பயிரிடுவதால் அப்பகுதியின் பல்லுயிரியம் பாதிக்கப்படுகிறது. அந்தந்த பகுதிக்கே உரியதாவர, உயிரினங்கள் கொண்ட தனித்தன்மை வாய்ந்த சூழலில் இது மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இயற்கை சமநிலையைக் குலைத்து, உணவுச் சங்கிலியையும் பாதிக்கிறது.ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், புகையிலை பயிரிடப்படாத இடங்களோடு ஒப்பிடுகையில், பன்னிரெண்டு பூஞ்சைவைரஸ் நோய்கள், 29 பூச்சிகள் தாக்குதல்போன்றவை புகையிலை பயிரிடப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. இது மற்ற உணவு பயிர்களிலும் நோய்களை உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கிறது.புகையிலை பொருட்களில் அடங்கியுள்ள 4,000 வகை நச்சுப்பொருட்கள் அதை பயன்படுத்துவோரை மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும், ஒட்டுமொத்த சமூகத்தையும் மறைமுகமாக பாதிக்கின்றன. அதிலுள்ள முக்கிய வேதிப் பொருளான நிக்கோடின், உலக அளவில் புகையிலை தொழிற்சாலைகளில் இருந்து ஓர் ஆண்டுக்கு 30 கோடி கிலோ கழிவாக வெளியிடப்படுகிறது.புகையிலுள்ள மீதைல் புரோமைடு, மணமற்ற நச்சுத்தன்மை கொண்ட வாயு பயிர்களில் உள்ள பூச்சிகளை அழிக்க சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. இதை சுவாசித்தால் நரம்பு பிரச்சனைகள், மகப்பேறின்மை பாதிப்பு ஏற்படும். இப்படியாக புகையிலையில் உள்ளஒவ்வொரு நச்சுப் பொருளும் சமூகத்தை மட்டுமின்றி நாம் ஆரோக்கியமாக உயிர் வாழத் தேவையான சுற்றுச்சூழலின் சமநிலையை குலைத்து, உலகை மறைமுகமாக அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்றன. இந்த பகாசூரன்நமக்குத் தேவைதானா? சுற்றுச் சூழலையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இந்நாளில் சபதமேற்போம்.

;