tamilnadu

img

செங்கொடியோடு தாயகம் திரும்பியவர் தோழர் பி.தமிழ்மணி.... படத்திறப்பு நிகழ்ச்சியில் தலைவர்கள் புகழாரம்....

உதகமண்டலம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரிமாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர் மறைந்த தோழர் பி.தமிழ்மணியின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயற்குழு உறுப்பினர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர், தமிழகத்திலேயே பெரிய ஊராட்சியான சேரங்கோடு ஊராட்சியின் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் மிகச் சிறப்பாக பணியாற்றிய தோழர் பி.தமிழ்மணி (73). கடந்த ஜூன் 17 அன்று காலமானார்.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களில் ஒருவராக இந்தியாவிற்கு வந்தவர் தோழர்பி.தமிழ்மணி.  இலங்கையில் தோட்டத்தொழி லாளர்களாக பணியாற்றிய பெற்றோர்களின் மகனாக பிறந்து, தானும் ஒரு தோட்டத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர் இலங்கையில் வசிக்கும் போதே இலங்கைசமசமாஜ் கட்சியின் (இலங்கை பொதுவுடமை கட்சி) உறுப்பினராக இருந்தார். இந்தியாவிற்கு திரும்பிய பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு வந்த அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, இறுதிக்காலம் வரையிலும் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார் 

அண்மையில் மறைந்த அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியில் ஆகஸ்ட் 1 அன்று கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழுஉறுப்பினர் டி.ரவீந்திரன் பங்கேற்று தோழர் பி.தமிழ்மணி அவர்களின் படத்தை திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழுஉறுப்பினர் ஆர்.பத்ரி, கேரள மாநிலம் வயநாடு மாவட்டச் செயலாளர் ககாரின், மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்று தமிழ்மணி அவர்களின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். 

முன்னுதாரணமாக...
மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் உரையாற்றுகையில், தோழர் பி.தமிழ்மணி அவர்கள் நீலகிரி மாவட்ட கட்சிப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்பு  உணர்வோடு பணியாற்றியவர் என்பதோடு, விவசாயிகளை அமைப்பாக திரட்டுவதிலும், கூடலூர் பகுதியில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத கைவச நிலத்திற்கான உரிமை போராட்டங்களிலும் விவசாயிகளை திரட்டுவதிலும் முன்னணி பாத்திரத்தையும் வகித்தவர் என நினைவு கூர்ந்தார்.மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தனதுஉரையில், “பி.தமிழ்மணி சேரங்கோடு ஊராட்சி தலைவராக பணியாற்றிய காலத்தில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள், பழங்குடி மக்கள் உள்ளிட்ட எளிய மக்களுக்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முக்கிய கவனம் செலுத்தியதோடு, கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். மேலும் கட்சியின் மிக முக்கியமான பொறுப்பில் இருந்து அவர்பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியை மிகவும் நேசிப்பவர் களாகவும் கட்சிக்கு நெருக்கமானவர்களாக மாற்றுவதிலும் வெற்றி பெற்றார். குறிப்பாக அவரது மூத்த மகன் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். அவரின் இத்தகைய பணிகளை நாம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய ஒன்றாகும் என குறிப்பிட்டார். 

கட்சியின் வயநாடு மாவட்டச் செயலாளர் ககாரின் உரையாற்றுகையில், கேரளாவிலும் தமிழகத்திலும் கட்சி அரசியலில் வித்தியாசங்கள்இருப்பினும், வகுப்புவாத பாஜகவை தோற்கடிப்பதில் ஒத்த கருத்து கொண்டவர்களாகவே இருக்கிறோம். இன்றைக்கு இந்தியாவின் மக்கள் ஒற்றுமைக்கு பெரும் ஆபத்தாக விளங்குகிற மதவாத சக்திகளை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டுமென சபதம் ஏற்றுக் கொள்வதே நாம் தோழர் பி.தமிழ்மணிக்கு செலுத்தும் உண்மையான செவ்வஞ்சலியாக இருக்கும் என குறிப்பிட்டார்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தனது உரையில், தோட்டத்தொழி லாளியாக தனது வாழ்க்கையை துவங்கிய தோழர் தமிழ்மணி படிப்படியாக உயர்ந்து கட்சியில் பல பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினார். அவர் எப்போதும் எளிய தோட்டத் தொழிலாளர்கள் மீதும் அவர்களின் கோரிக்கைகளின் மீதும் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். எனவே அவரது நினைவாக, தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சேரம்பாடியில் தோட்டத்தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் விரைவில் “தோழர் பி.தமிழ்மணி நினைவகம்” என ஒரு அலுவலகம் கட்டப்படும் என குறிப்பிட்டார். 

படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதமிழ்மணியின் மூத்தமகனும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான டி.சுதர்சன் பேசுகையில், “அவர் எங்களுக்கு சிறந்த அப்பாவாக இருந்ததோடு, எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உன்னதமான தோழராகவும் இருந்திருக்கிறார். இயக்கத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளை,  கட்சியோடு இணைந்து எங்கள் குடும்பமும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என குறிப்பிட்டதோடு, கட்சியின் சார்பில் கட்டப்படவுள்ள தோழர் பி.தமிழ்மணி நினைவகத்திற்காக நிதியாக எங்கள் குடும்பத்தின் சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்தார்.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட “என் நிலம் என் உரிமை” எனும் பிரசுரத்தை வயநாடு மாவட்டச் செயலாளர் ககாரின் வெளியிட மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி பெற்றுக்கொண் டார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.குஞ்ஞி முகமது, ஏ.யோஹண்ணன், சி.வினோத் உள்ளிட்டு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்வில் எருமாடு பகுதிக்குழு செயலாளர் கே.ராஜன் வரவேற்புரைநிகழ்த்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அனீபா மாஸ்டர் நன்றி கூறினார்.

;