tamilnadu

img

இந்நாள் ஜுன் 15 இதற்கு முன்னால்

1752 - மின்னலில் உருவாவது மின்சாரம்தான் என்பதை பெஞ்சமின் பிராங்க்ளின், பென்சில்வேனியாவில் காற்றாடி(பட்டம்) ஆய்வின்மூலம் நிறுவினார். அமெரிக்காவை நிறுவிய தந்தைகளுள் ஒருவரான பிராங்க்ளின் ஒரு பல்துறை விற்பன்னர். இவர் ஓர் அரசியல்வாதி மட்டுமின்றி, எழுத்தாளர், அச்சிடுபவர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர், சமூக செயற்பாட்டாளர் என்பன உள்ளிட்ட ஏராளமான முகங்களைக் கொண்டவர். இயற்பியலிலும், அமெரிக்க விடுதலைப் போருக்கு வித்திட்ட அமெரிக்க விழிப்புணர்வுக் காலத்திலும் மிகமுக்கியமானவராகக் குறிப்பிடப்படுகிறார். அமெரிக்காவிலிருந்த குடியேற்றங்களிடையே ஒற்றுமையை உருவாக்க இவர் மேற்கொண்ட முயற்சிகளால் ‘முதல் அமெரிக்கர்’ என்றழைக்கப்பட்டார். குடியேற்றங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இவர் வெளியிட்டதே, செய்தித்தாளில் வெளியான முதல் கருத்துப்படமாகும்(இத்தொடரில் 2018 மே 9இல் இடம்பெற்றுள்ளது). மின்சாரம்குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, நேர் மின்னூட்டம், எதிர் மின்னூட்டம் என்று பெயரிட்டவர் இவர்தான். மின்னூட்டங்களின் அழிவின்மை விதியைக் கண்டுபிடித்தவரும் இவர்தான். காகிதக் காற்றாடி மழையில் கிழிந்துவிடும் என்பதால், பட்டுத்துணியால் செய்யப்பட்ட காற்றாடியைச் சோதனைக்குப் பயன்படுத்திய பிராங்க்ளின் ஈர நூலின் வழியாகப் பாய்கிற மின்சாரம் லேய்டின் கலன் என்னும் அக்காலத்திய மின்சார சேமிப்புக் கலனில் சேமிக்கப்படுவதை நிரூபித்தார். மின்சாரத்தின் ஆபத்துகளை உணர்ந்து பாதுகாப்பாக இவ்வாய்வில் ஈடுபட்டாலும், உண்மையில் காற்றாடியை மின்னல் நேரடியாகத் தாக்கவில்லை. அவ்வாறு தாக்கியிருந்தால் அவர் இறந்திருப்பார். மேகங்களிலிருந்த மின்னூட்டமே அவரது சோதனைக்குப் போதுமானதாக இருந்தது. மின்சாரம் குறித்த ஆய்வுகளுக்காக அரச கழகத்தின் கோப்லி பதக்கம் பிராங்க்ளினுக்கு 1753இல் வழங்கப்பட்டது. மின்சாரம்குறித்த ஆய்வுகளின் பயனாக இடிதாங்கியை உருவாக்கிய பிராங்க்ளின், இரட்டைக் குவிய(பைஃபோக்கல்) கண்ணாடி(இத்தொடரில் 2018 மே 23இல்), புகை குறைவான பிராங்க்ளின் அடுப்பு, நெகிழ்வான சிறுநீர் வடிகுழாய்(கத்தீட்டர்), கண்ணாடியாலான இசைக்கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கியிருந்தாலும், எதற்குமே காப்புரிமை பெறவில்லை. ‘மற்றவர்களின் கண்டுபிடிப்புகளை நாம் பயன்படுத்தும்போது, நம் கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும்’, என்று தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் பிராங்க்ளின். மக்கள்தொகையியல் உள்ளிட்ட இன்னும் பல துறைகளிலும் பங்களிப்புச் செய்துள்ள பிராங்க்ளின் மிகச்சிறந்த சதுரங்க விளையாட்டு(செஸ்) வீரரும்கூட!