tamilnadu

img

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றம் - மனித உரிமை மீறல் மீது நடவடிக்கை.... ஐ.நா. மன்றத்தில் இந்தியா அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.... நாமக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி....

நாமக்கல்:
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெற உள்ள விவாதத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் குற்றங்கள் மீது உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதற்கு இந்தியா அழுத்தமாக வாதிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வாயன்று நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை இந்தியாவில் அன்றாடம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில்இரண்டு முறை சமையல் எரிவாயு விலை ரூ.75 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மானியமும் நிறுத்தப்பட்டுவிட்டது. பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் கட்சியின் சார்பில் கண்டனஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.இம்மாதம் 22 ஆம் தேதி ஜெனீவாவில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. இலங்கை ராணுவம் பல்லாண்டுகளாக தமிழர்கள் மீது நடத்தி இருக்கின்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க தொடர்ந்து இலங்கை அரசாங்கத்திடம் வற்புறுத்தியும் இப்போது வரை போர்க் குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனிதஉரிமைகள் மீறல், பெண்கள் மீதானபாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக  எந்தவித விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 2012 ஆம் ஆண்டுஐ.நா. சபை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு முந்தைய அரசாங்கம் ஒப்புதலையும் வழங்கியிருந்தது. அத்தீர்மானத்தின்படி இலங்கை அரசாங்கம் போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என ஏராளமான அம்சங்கள் இருந்தன. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்சே சகோதரர்கள், அந்த தீர்மானத்தி லிருந்து விலகிக் கொள்வதாக அறி வித்துள்ளனர். மேலும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெற உள்ள விவாதத்தில்இலங்கை உள்நாட்டு போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் குற்றங்கள் குறித்து சர்வதேச நம்பகத்தன்மை கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியா அழுத்தமாக வலியுறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும். தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்களது மொழி, பண்பாடு,வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தியா சார்பில் வலியுறுத்த வேண்டும்.

தமிழக அரசு பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட தனியார் நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கிக் கொண்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல பேர் வெளியே கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். திருச்செங்கோட்டில் சுப்பிரமணியம்-மேனகா என்ற தம்பதிகளும் இறந்துள்ளனர்.கடன் தவணைகளை கட்ட ஓராண்டு காலத்திற்கு கால அவகாசத்தை நீடிக்க வேண்டும். அதைக்கூட மத்திய-மாநில அரசுகள் செய்யவில்லை. சாதாரண உழைப்பாளி மக்கள், ஏழை- எளிய மக்களை கடன் வலையில் இருந்து காப்பாற்ற அரசு முன்வர வேண்டும்.ஜிஎஸ்டி வரி, பணம் மதிப்பிழப்பு, பட்ஜெட்டில் போடப்பட்ட புதிய புதிய வரிகள், கொரோனாவால் ஏற்பட்டிருக்கிற நெருக்கடி போன்றவற்றால், சிறு-குறு தொழில்களும் ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி, கைத்தறி, கட்டுமானத் தொழில் உள்ளிட்டபல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நெருக்கடி காரணமாக விசைத்தறிகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே அரசாங்கம் விசைத்தறி தொழிலுக்கு குறைந்த விலையில் நூலை வாங்கி அரசு விநியோகம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், சத்துணவு, டாஸ்மாக் ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள னர். 5 லட்சத்திற்கு மேல் அரசு காலிபணியிடங்கள் உள்ளன. தூய்மைப் பணியாளர்கள் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அரசு காண்ட்ராக்ட் முறையில் பணிகளுக்கு ஆட்கள் எடுத்தால் எந்தஅடிப்படையில் அரசு வேலை கிடை
க்கும். மின்வாரியத்தில் 15 ஆயிரத்துக்கும்மேற்பட்ட கேங்மேன் தொழிலாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. நேர்காணலும் நடத்தப்பட்டது. ஆனால் தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற அடிப்படையில் வைத்திருப்பது முறையல்ல. எனவே அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அணி ஒரு மகத்தான வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிமுக கூட்டணி கலகலத்துபோன கூட்டணி. ஒற்றை கருத்தோடு செயல்படவில்லை. அதிமுக அரசு நான்குவருட காலத்தில் சட்டமன்றத்தில் எந்தவிதஅறிவிப்பையும் வெளியிடாமல் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும்போது நzத் திட்டங்களை அறிவிப்பது ஏமாற்று வேலை. 

பாண்டிச்சேரி மாநிலத்தை இயக்குவது கிரண்பேடி மூலம் பிஜேபிதான். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிரட்டுகின்றனர். பாண்டிச்சேரியில் ஆளுநர் மூலம் பாஜக சீர்குலைவு வேலையில் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் மோடி சொல்வதை தலையாட்டி பொம்மையாக செயல்படுவதுதான் தமிழக அரசின் செயலாக உள்ளது. வேளாண் சட்டம், நீட்தேர்வு, இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கைஎன பல்வேறு மக்கள் விரோத செயல்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் என்ற திட்டத்தை கொண்டு வந்து பாஸ்டேக் கம்பெனி மூலம் வைப்பு தொகையாக ரூ.1,000 முதல் 5,000 வரை அவர்களது கம்பெனி கணக்கில் வைத்துக்கொண்டு பாஸ்டேக் முறையை அமல்படுத்தி இருப்பது பகல் கொள்ளையாக உள்ளது. இதுபோன்ற மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, பி.பெருமாள், ந.வேலுசாமி, எம்.அசோகன், கே.தங்கமணி, பி.ஜெயமணி, எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ், ஏ.டி.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;