tamilnadu

img

காணாமல்போன 11 மீனவர்கள் கரை திரும்புகின்றனர்.... படகில் மோதிய கப்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.....

நாகர்கோவில்:
தேங்காப்பட்டணம் கடற்கரையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற விசைப்படகு விபத்துக்குள்ளாகி காணாமல்போன 11 மீனவர்கள் கரை திரும்புகின்றனர். விபத்து ஏற்படுத்திவிட்டு பாதிக்கப்பட்டோரை மீட்காமல் தப்பிச் சென்ற கப்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் பிராங்ளின். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 11 பேர் கடந்த 9 ஆம் தேதி தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் கடந்த 24 ஆம்தேதி மீனவர்கள் சென்ற விசைப் படகு கோவா அருகே நடுக்கடலில் உடைந்து கிடப்பதை சக மீனவர்கள் பார்த்தனர். இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.மீனவர் குடும்பத்தினரும், மீனவ அமைப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.  இதனிடையே மாயமான  மீனவர்களை விமானம்,  ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடைபெற்றது. மும்பையில் இருந்து சென்ற கடலோர கப்பல் படைக்கு சொந்தமான கப்பல் மூலமாகவும் தேடுதல் பணி நடைபெற்றது. 3 நாட்களாகியும் மீனவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விசைப் படகின் உரிமையாளர் ஜோசப் பிராங்ளின் புதனன்று காலை தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். அவர், தற்போது தாங்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள் ளார். இந்த தகவல் மற்ற மீனவர்கள் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

கடந்த 23 ஆம் தேதி கோவா கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கப்பல் ஒன்று விசைப்படகின் மீது மோதியதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் உள்ள சேட்டிலைட் போனுக்கு மற்றவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. 400 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் இருப்பதை கடற்படையினர் அடையாளம் கண்டு மீட்டு வர புறப்பட்டனர்.மீனவர்களின் விசைப்படகின்  மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, மீனவர்களை மீட்காமல் சென்ற கப்பல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் அமைப்பினர் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;