tamilnadu

img

எழுத்தாளர் எல்.பி.சாமி காலமானார்...

நாகப்பட்டினம்:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் எல்.பி.சாமி திங்களன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 67.

இவர் எம்.ஏ., பி.எட் படித்தவர். தமிழ் புலவர் பயிற்சி பெற்றவர். பதிநான்கு மொழிகள் கற்றறிந்து புலமை பெற்றவர். சித்த மருத்துவத்தை எளிய வழியில் அடிதட்டு மக்களுக்குகொண்டு சென்றவர். மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ்ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.இலை நுனியில் மழை, குடியுரிமை திருத்தச் சட்டம், குழந்தைகளுக்கான புத்தகம் என இவரது படைப்புகள் பல வெளிவந்துள்ளன. செம்மலர், தாமரை, இனிய உதயம், திசைஎட்டும் என வெகுஜன மாத இதழ்களில் ஏராளமான மொழி பெயர்ப்பு சிறுகதைகள் எழுதியுள்ளார். தமிழ்மொழியிலிருந்து மலையாள மொழிபெயர்ப்புக்கு கேரள அரசின் பாராட்டைப் பெற்றவர். 

பணி ஓய்வுக்கு பின் சிபிஎம் கீழ்வேளூர் கிளைச் செயலாளராக பணியாற்றினார். நாகைமாலி (2011, 2017) சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் ஐந்துவருட காலம் சட்டமன்ற அலுவலக செயலாளராக திறம்பட பணியாற்றினார். மார்க்சிய சிந்தனையோடு எதையும் அணுகியவர். தன் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை கட்சி பணி செய்ய வழி காட்டியவர். இவருக்கு பாவாணன், பாவேந்தன், சரவணதமிழன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவரது மனைவி எல்.பி.வசந்தி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் நாகை மாவட்டக் கன்வீனராக பணியாற்றுகிறார். தமுஎகச மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆகியபொறுப்புகளை வகித்தவர். நாகை மாவட்ட தமுஎகச வேரூன்றி வளர்வதற்கு உறுதுணையாக நின்றவர். இளைஞர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் சந்திக்கும் இடங்களிலெல்லாம் மார்க்சிய சிந்தனையை போதித்தவர்.

இறுதி நிகழ்ச்சி தலைவர்கள் அஞ்சலி
எழுத்தாளர் எல்.பி.சாமி-யின் இறுதி நிகழ்ச்சி கீழ்வேளுரில் உள்ளஅவருடைய இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு, சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி, மாநிலக் குழு உறுப்பினர்கள் வீ.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ்சந்திரபோஸ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர், திமுக ஒன்றியச் செயலாளர் ப.கோவிந்தராஜன், விதொசமாநிலச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வடிவேல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தமுஎகச அஞ்சலி
தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆதி.உதயக்குமார். பொருளாளர் ஆவராணி, ஆனந்தன், மாநிலக்குழு உறுப்பினர் ந.சத்தியசீலன், மாநில துணைப் பொது செயலாளர் களப்பிரன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம், மாவட்டக் குழுஉறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்

;