tamilnadu

img

பாதாளச் சாக்கடையில் பெரும் ஊழல்.... மயிலாடுதுறை முழுவதும் மரணப் பள்ளங்கள்..... மார்க்சிஸ்ட் கட்சி நூதனப் போராட்டம்....

மயிலாடுதுறை:
மாயூரம் மாயவரமாகி, மாயவரம் மயிலாடுதுறையாகி என ஊரின் பெயர் மட்டும் மூன்று இருக்கிறது. ஆனால் பாரம்பரியமிக்க நகரின் மாபெரும் அடையாளமாக மாறி இருக்கிறது 2007-ல் அமைக்கப்பட்ட பாதாளச் சாக்கடைதிட்டம். பெரும் ஊழலுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டதால் நகர் முழுவதும் மரணப் பள்ளங்கள், சாலைகள் முழுக்க வழிந்தோடும் சாக்கடை கழிவுகள், மலை போல் குவிந்து கிடக்கும்குப்பை மேடுகள், வாந்தி எடுக்க வைக்கும் துர்நாற்றம், தொடரும் நோய்த் தொற்றுகள் என மயிலாடுதுறை நகர மக்கள் நாள்தோறும் கடும்இன்னலை அனுபவித்து வருகின்றனர்.

பல போராட்டங்களை நடத்தியும் கொஞ்சமும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில்  போக்குவரத்து வசதியும் முற்றிலும் பாதிக்கப்பட்டு, நகரம் என்பதற்கான தகுதி இல்லாமல் மயிலாடுதுறை போனதை கண்டித்தும், நிரந்தர தீர்வை செய்து தரக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நீதிமன்றம்அருகிலிருந்து பாடை ஊர்வலம், ஒப்பாரியுடன் துவங்கி முக்கிய நகர வீதிகளின் வழியாக வந்தடைந்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்தது. 

மக்களின் கவனத்தை ஈர்த்த பாடை ஊர்வலத்தில் ‘செத்துப் போன நகராட்சி’யை அம்பலப்படுத்தும் விதமாக இறந்தவர் போன்று கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் துரைக்கண்ணுவும், மரணப் பள்ளங்களில் விழுந்து மக்கள் விபத்துக்குள்ளானதை உணர்த்தும் வகையில் காயப்பட்டு கட்டுகளுடன் வட்டக்குழு உறுப்பினர் மாரியப்பனும், மறையூர் கட்சி உறுப்பினர் சேகரும் ஊர்வலத்தில் நடித்து காண்பித்து நகராட்சியின் அவலத்தை வெளிப்படுத்தினர்.ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், டி.கணேசன், சிவிஆர் ஜீவானந்தம், ஏ.வி.சிங்காரவேலன், ப.மாரியப்பன், ஒன்றிய செயலாளர் சி.மேகநாதன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், வட்டக் குழு உறுப்பினர்கள் வாலிபர் சங்க, மாதர் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

;