tamilnadu

img

ஒரு கட்சி ஆட்சி முறையை ஏற்படுத்த பாஜக முயற்சி.... கீழ்வேளூர் கூட்டத்தில் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு....

கீழ்வேளூர்:
இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சிமுறையை ஏற்படுத்த முயல்கிறது பாஜக என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுஉறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டினார்.

நாகை மாவட்டம்,கீழ்வேளூரில் வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும், தேர்தல் பரப்புரை-நிதியளிப்பு பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று மாலையில் மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.நாகை மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நாகை மாலி, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் சிறப்புரை யாற்றினார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆகியோர் உரையாற்றினர்.
நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை மாவட்டக்குழுக்கள் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சி நிதியாக  நாகை மாவட்டக்குழு சார்பில் ரூ.15 லட்சத்து 50 ஆயிரமும், திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் ரூ. 19 லட்சமும், மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் ரூ. 11 லட்சமும்  மாவட்டச் செயலாளர்களால் பிரகாஷ்காரத்திடம் வழங்கப்பட்டது. 

நிதியைப் பெற்றுக் கொண்டு பொதுக் கூட்டத்தில் பிரகாஷ்காரத் பேசியதிலிருந்து:

தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக  இத்தேர்தல் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாஜக  இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி முறையை நிறுவுவதற்குமுயற்சித்து வருகிறது. தனக்கு அடிமையாக, அடிவருடியாக உள்ள கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளை அழிக்க பார்க்கிறது. இங்கே மோடியும், அமித்ஷாவும் ஒரு கையில்சிபிஐயையும், மறுகையில் அமலாக்கத்துறை யையும் இரு ஆயுதங்களாக வைத்திருக்கின்ற னர். அதைக்கண்டு அதிமுக அஞ்சி நடுங்கி அடிபணிந்து மோடியின்  அடிமையாக உள்ளது.எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும் விவசாயிகளுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்படுகிறது. பாஜக அரசு கொண்டு வருகிற  விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எதிரான சட்டங்களை ஆதரித்து வருகிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் இரு எம்.பிக்கள் உள்ளிட்ட8 எம்பிக்கள் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கேரளத்தில் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக  தீர்மானத்தை ஏகமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.

 வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாத மத்திய அரசிடம் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடுகிறோம்.  அதே வேளையில் கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான நமது அரசு 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயித்து வழங்கி விவசாயிகளுக்கு துணையாக இருக்கிறது. குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து அதை சட்டமாக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக போராடி வருகிறோம். கொடிய வேளாண் சட்டங்களை எதிர்த்து  100 நாட்களை தாண்டி தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் மோடி அரசின் குணாம்சத்தை தெளிவுபடுத்தி வருகிறது. குளிரில், சாலை விபத்தில் என இதுவரை 250 பேர் அப்போராட்ட களத்தில் உயிர்நீத்து தியாகம் செய்திருக்கின்றனர்.

1 மாத காலத்தில்  பெட்ரோல்,டீசல்,கேஸ் விலை உயர்ந்துக்கொண்டே வருகிறது. கேஸ் விலை 3 முறை ரூ .25, ரூ.50, ரூ.25 என உயர்ந்து ஆயிரத்தை நெருங்கி வருகிறது.பெட்ரோல் விலை சதம் அடிக்கப் போகிறது. ஏராளமான வரிகளை போட்டு மக்களை கசக்கிப் பிழிந்து பெருமளவில் பணத்தை சேர்த்து கொள்ளை அடிக்கின்றனர். இந்திய நாட்டை ஆளுகின்ற  மோடியும், அமித்ஷாவும் மற்ற ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகளும் ஒரே நாடு,ஒரே கலாச்சாரம்,ஒரே மொழி என்றும்,இந்தி மட்டும் தான் ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்று  திட்டமிடு கின்றனர்.  நாடு முழுவதும் உள்ள பல்வேறு இனங்களின் உணர்வுகளை அடித்து நொறுக்கி அழிக்கப்பார்க்கின்றனர். மத ரீதியாக மோதல்களை உருவாக்கி ஆதாயமடைய பார்க்கின்ற னர். ஒரே தலைவர் மோடி என்ற ஆபத்தான எண்ணத்தை உருவாக்க முயல்கின்றனர். மேலும் பாஜக அரசு பிராமணிய ஆதிக்கம் கொண்ட மநுவாத சிந்தனையை திணிக்க முயலுகிறது. உயர்சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக தலித் மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணிதிரட்டிய பாரம்பரியம் மிக்க தமிழகத்தின் கலாச்சாரத்தைதமிழ் மக்களின் உரிமைகளை, உணர்வுகளை, வாழ்வாதாரத்தை பாதுகாக்க சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ள திமுக கூட்டணியை வெற்றி செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.   

படக்குறிப்பு : கீழ்வேளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரகாஷ்காரத் உரையாற்றினார். மேடையில் உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் தலைவர்கள்.

;