tamilnadu

img

ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயல்வதா? கருத்துக்கேட்பு கூட்டத்தில் தூத்துக்குடி மக்கள் கொந்தளிப்பு..... ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்....

தூத்துக்குடி:
ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிப்பதற்கு கருத்துக்கேட்பு கூட்டத்தில் தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து  கொந்தளித்துள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 23 வெள்ளியன்று  காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட்ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாமா என்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் பொதுமக்கள், பல்வேறுசமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர். விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ள நபர்களை மட்டும் காவல்துறையினர் உள்ளே அனுமதித்தனர். கருத்துக்கேட்பு கூட்டத்தில் கூடுதலாக மக்களை அனுமதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக வாயிலில் போராட்டக்குழுவினர் தரையில் அமர்ந்து அனைவரையும் கருத்து கேட்பு கூட்டத்தில் அனுமதிக்கக் கோரி தர்ணா போராட்டத்தை நடத்தினர்.இதன்பின்னர்  அமைப்புக்கு 3 பேர் வீதம் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் தலைமையில் துவங்கியது. 

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
கருத்து கேட்புக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் மேயர்  அந்தோணி கிரேஸ் தரையில் அமர்ந்து தர்ணாவில்ஈடுபட்டார். கூட்டம் தொடங்கிய பின்னர்வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. ஆனால் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் ராஜேஸ், பாலமுருகன் தாமதமாக வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே சென்றனர்.அதேபோல் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை  தூத்துக்குடி புறநகர் டிஸ்பி பொன்னரசு உள்ளே அனுமதிக்காமல் ஒருமையில் பேசி விரட்டினார். இதுபோன்று பல்வேறு இடங்களில் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.ஊடகத் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல்குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும்  அதிகமான நபர்களை  வெளியேற்றிவிட்டு, கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தினர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசுகையில், நிச்சயமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்ததும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருக்கையை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.மேலும் பேசுகையில், “ஸ்டெர்லைட்ஆலையை திறக்க கூடாது என்ற அரசின் கொள்கை முடிவில் அரசு உறுதியாக உள்ளது”.  ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக யாரும்
கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால்சிலர் மனுவாக தங்களது கருத்துக் களை தெரிவித்தனர் என்று கூறினார்.

தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில்,வெள்ளியன்று காலை 11 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறதுஎன்றார். ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில் கூட்டம் நிறைவடைந்தது.ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்சிஜன் ஆலை இருப்பதாக தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை  திறக்க மத்திய அரசுடன் இணைந்து முயற்சிப்பதாக  ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு 
கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் குவிந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை எதிர்ப்பாளர்கள் விரட்டியடித்தனர். உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.கூட்டத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கூறுகையில், ஆலை திறக்கப்படாது என்று ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். இதனை நாங்கள்நம்பி செல்கிறோம். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் ரத்தத்தின் மீது  ஆணையாக ஆலையை திறக்கவிட மாட்டோம் என்று தெரிவித்தனர். 

கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர் செயலாளர் தா.ராஜா கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்உற்பத்தி செய்வது தொடர்பாக தூத்துக்குடி நகர் முழுவதும்பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.  மக்கள் கருத்து கேட்பு கூட்டம் என்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தோம். ஆனால் காவல்துறையினர் கருத்து கேட்புகூட்டத்திற்கு அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அனுமதித்தனர். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண் அனைத்து பொது மக்களும் ஸ்டெர்லைட் ஆலை மூலம் பெறப்படும் ஆக்சிஜன் தேவை இல்லை என்றும்,13 பேரை கொலை செய்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன்உற்பத்திக்காக திறக்க அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர் என்று கூறினார்.இந்த கூட்டத்தில் சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, புறநகர செயலாளர் பா. ராஜா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, மாணவர்  சங்கமாவட்ட தலைவர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

3-ஆம் பக்க தொடர்ச்சி பிரிப்பு இல்லாமல் ஒரே தொகுப்பாக உள்ளது...  

;