tamilnadu

img

சிங்கப்பூர் கப்பல் மோதி காணாமல் போன மீனவர்களை கடற்படை மூலம் தேடுக... மத்திய, கர்நாடக அரசுகளுக்கு சிஐடியு கோரிக்கை...

தூத்துக்குடி:
கர்நாடக கடல்பகுதியில் விசைப்படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காணாமல் போன தமிழக மீனவர்கள் 4 பேரை கடற்படை மூலமாக விரைந்து தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தூத்துக்குடி மாவட்ட மீனவர் மற்றும் சங்கு குளி தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் இரா.பேச்சிமுத்து, செயலாளர் எஸ்.பரமசிவன் ஆகியோர் ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனு விபரம் வருமாறு:

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்பட்டு 3 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டுமீனவர்கள் உயிரோடு மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 9 மீனவர்களை தேடி வருவதான செய்தி மிகவும் வேதனைதரக் கூடியதாக உள்ளது, தமிழக மீனவர்கள் 7 பேர்,  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 பேர் என 14 மீனவர்கள் அந்த விசைப்படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த விபத்தில் தமிழக மீனவர்கள் இரண்டு பேர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைசார்ந்த தாசன் மற்றும் அலெக்சாண்டர், மேற்கு வங்கத்தை சார்ந்த மாணிக்கதாஸ் ஆகிய மூன்று மீனவர்கள் உடல்கள்இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படை மூலமாகதேடுதல் நடத்துக!
இதில் உயிருக்கு போராடி வந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் தாஸ்ஆகியோரை மீட்டுள்ளனர். மீதமுள்ளஒன்பது மீனவர்களில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு சேர்ந்த டென்ஷன்,ராமநாதபுரம் வேதமாணிக்கம், பாலமுருகன், பழனிவேல், மேற்குவங்கம் உத்தம் தாஸ், மாணிக்கதாஸ் உள்பட 9 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. மாயமான மீனவர்களை தேடும் பணி நடைபெறுவதாக அரசு  கூறிவருகிறது. தேவையான அளவிற்கு நவீன உத்திகளை கடைப்பிடித்து இந்திய கடற்படைமூலமாக போர்க்கால பணிகள் மேற்கொள்வது போல் நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி கப்பல் பாதுகாப்புப் படையினரால் சுடப்பட்டு இறந்த மீனவர்களுக்கும் அதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் இன்று வரை நஷ்ட ஈடு கிடைக்காத நிலை உள்ளது. இந்தச் சூழ்நிலையில் கால தாமதம் ஏற்படாத வகையில் சிங்கப்பூர் சரக்கு கப்பல் மீது கர்நாடக அரசும் மத்திய அரசும் வழக்குப் பதிவு செய்து உரிய முறையில் புலன்விசாரணையை விரைவாக நடத்திடவும் உயிரிழந்த மீனவரின் குடும்பங்களுக்கும் மாயமான மீனவர்கள் குடும்பங்களுக்கும் உயிரோடு காப்பாற்றிசிகிச்சையில் இருந்து வரும் மீனவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிப்பது அரசின் கடமையாகும்.

சிங்கப்பூர் கப்பல் உரிமையாளரிடம் இழப்பீடு பெறுக! 
மேலும் முழுமையாக உயிரிழந்த மீனவர்கள், மாயமான மீனவர்கள், சிகிச்சையில் இருந்து வரும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, முழுமையாக சேதமடைந்த விசைப்படகு உரிமையாளருக்கும்  இழப்பீடாக சிங்கப்பூர் சரக்கு கப்பல் உரிமையாளரிடம் இருந்து ரூபாய் 100  கோடி பெற்று உரியவர்களுக்கு வழங்குவதும் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களை சார்ந்த  ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அரசின் கடமையாகும். மேலும்,கடலில் மீன்பிடி தொழிலில் ‌ஈடு
பட்டு கொண்டிருக்கும் போது இதுபோன்ற கொடூரமான நிகழ்வுகள் நடக்காவண்ணம் உரிய நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்எடுக்கவும் காலதாமதம் தவிர்த்து உரியநிவாரணங்களை வழங்கவும் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கவும் தூத்துக்குடி மாவட்ட  மீனவர் மற்றும் சங்கு குளி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;