tamilnadu

img

தமிழ்நாட்டை அடமானம் வைத்து பாஜகவின் பாதம் தாங்கிக் கிடக்கிறார் முதல்வர்.... மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு....

தூத்துக்குடி:
தமிழ்நாட்டையே அடமானம் வைத்து, பாஜகவின் பாதம் தாங்கிக்கிடக்கும் பழனிசாமிக்கு வாய்ச்சவ டால் வசனங்களை பேசுவதற்கு உரிமை இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை – கலைஞர் திடலில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும்  நாம் ஆட்சிக்கு வந்து பொறுப்பேற்ற நாளிலிருந்து 100 நாட்களில் நிறைவேற்றியே தீருவோம். தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானபோராட்டத்தின் போது 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 13 பேரை சுட்டுக் கொன்றது இந்த ஆட்சி. அது ஒரு கருப்பு நாள். நியாயமான முறையில் 100 நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். 100-வது நாள் ஒரு பேரணியாக வந்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம்நடத்த வேண்டும், மறியல் செய்ய வேண்டும், கலவரம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் வரவில்லை.அமைதியாக ஒரு பேரணியை நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்துமனுக் கொடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள்.

ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர், அலுவலகத்தில் இருந்து அதைப் பொறுமையாக வாங்கி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஆனால், அவர் ஆட்சி - அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அந்த இடத்தை விட்டு வெளியில் சென்றுவிட்டார். அதற்குப் பிறகு அந்தப் பேரணியைக் கலைக்க  வேண்டும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சென்னைக் கோட்டையில் இருந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டார்கள். அதனால் தடியடி நடத்தப்பட்டது. அதற்குப்பிறகு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 13 பேரை காக்கை குருவிகளை சுட்டுத் தள்ளுவது போலச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லும் நிலை தான் இருந்தது. எதுவும் தெரியாதது போல பாவலா செய்து கொண்டிருந்தார். முதலமைச்சர் நேரடியாக வந்து பார்க்க வில்லை. அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் அந்தக் கொடுமைக்கு இதுவரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. நிச்சயமாக நாம் ஆட்சிக்கு வரப் போகிறோம். வந்ததற்குப் பிறகு அதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம்.

மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு நலவாரியம் வேண்டும். ஆண் பெண் இருவருக்கும் சம ஊதியம் என்ற யோசனைகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உப்பளத் தொழிலாளர்களின் நலனை மனதில் வைத்துக் கொண்டு விரைவில் அமையவிருக்கும் தி.மு.க. அரசு நிச்சயமாக அவர்களுக்கு துணையாக இருக்கும். உங்கள் கோரிக்கைகள் அப்போது முழுமையாக நிறை வேற்றப்படும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது. அடிமைப்படுத்தவும் முடியாது என்றும் பழனிசாமி சொல்லி இருக்கிறார். இதை அவர் தில்லி போனாரே அங்கு  சொல்லி இருந்தால் பாராட்டலாம். அல்லது 14-ம் தேதி பிரதமர் மோடிஅவர்கள் சென்னை வருகிறாரே! அந்த மேடையில் சொல்வதற்கு பழனிசாமி தயாரா?தமிழ்நாட்டையே அடமானம் வைத்து, பாஜகவின் பாதம் தாங்கிக் கிடக்கும் பழனிசாமிக்கு இதுபோன்ற வாய்ச்சவடால் வசனங்களை பேசுவதற்கு உரிமை இல்லை! இந்த வாய்ச்சவடால், வீண் ஜம்பம், பொய் விளம்பரம், போலி நடிப்பு இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளிவைக்கும் காலம் நெருங்கிவிட்டது. இன்னும் மூன்றே மாதத்தில் பழனிசாமியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதன் பிறகு அமையும் அரசு தான், உண்மையான அரசாக அமையும். ஒரு அதிகாரம் பொருந்திய மக்கள் அரசாக அமையும். உங்களுக்கான அரசாக அமையும் என்றார். 

;