tamilnadu

img

சுருட்டும் வேலைகள் முன்னே... மக்கள் தேவைகள் பின்னே.....

சிவானந்தா பேருந்து நிறுத்தம் என்றழைக்கப்படும்   படத்தில் நாம் காணும்   இந்த நிறுத்தம்  புறநகரில் ஏதோ ஒரு  சாலையில்  உள்ள  நிறுத்தம் அல்ல 160 ஆண்டு பழமையான மன்னார்குடி நகராட்சி அலுவலகத்திற்கு  வெகு அருகில் நாற்பதே நாற்பது அடி தூரத்தில் உள்ள பேருந்து நிறுத்தம்தான்  இது. 120 அடி தூரத்தில்  மன்னார்குடி அரசுமாவட்ட தலைமை மருத்துவமனை   உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க பின்லே மேனிலை பள்ளி மற்றும் தேசிய மேனிலை பள்ளிகள் முறையே  200 மற்றும்  350 அடி தூரத்தில் உள்ளன.  ஆர்டிஓ அலுவலகம்!   200 அடி தூரத்தில்தான் உள்ளது. நான்கு திருமண மண்டபங்கள் அருகில் உள்ளன. அரசு  கலைக்கல்லூரி இதேசாலையில் உள்ளது.

மன்னார்குடி  பேருந்து நிலையத்திலிருந்து நான்கு முக்கிய மாநில போக்குவரத்து நெடுஞ்சாலைகளில் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருமக்கோட்டை செல்லும்  அத்தனை பேருந்துகளுக்கும் இந்த நிறுத்தம் பொதுவானது. பள்ளிக்காலங்களில் மாணவர்கள், மருத்துவமனைக்கு வந்து செல்லும் புறநோயாளிகள், வருவாய்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை, அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள், பள்ளிகல்லூரி மாணவர்கள் அனைவருக்கும்  இந்த பேருந்து நிறுத்தம்தான்அருகில் உள்ள முதல் பேருந்து நிறுத்தம் ஆகு. வேலை நாட்களில்  மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரைமக்கள் கூட்டம்  இங்கு அலை மோதும்.இந்த நிறுத்தத்தில் அமர்ந்திருந்த  பெண்மணி ஒருவர் முத்துப்பேட்டை பஸ் வந்துவிட்டது என்ற குரல் கேட்டவுடன்  பதறியடித்து வெளியே வரும்போது பள்ளத்தில் கால் நொடித்து கீழேவிழுந்து திரும்பவும் மருத்துவ மனைக்கே கொண்டு செல்லப்பட்ட தாகக்  கூறினார்கள். காலையில் 6 மணியிலிருந்து 8 மணிவரை பத்து பதினைந்து நாய்கள்  இந்த நிறுத்தத்திற்கு எதிரே விளையாடிக் கொண்டிருக்கும். மழைக் காலத்தில் இதன்எதிரே குளமாய் தண்ணீர் தேங்கிநிற்கும். நான்கைந்து செங்கற்களை நடுவில் போட்டு சில பெருந்தன்மைக்காரர்கள் மழையில் ஒதுங்கிக்கொள்ள வசதி செய்து கொடுத்திருப்பார்கள்.இந்த நிறுத்தத்தின் வழியே தான்  பெரிய அதிகாரிகள், அரசியல்வா திகள் மந்திரிமார்கள் தினம் தினம்தங்கள் பரிவாரங்களோடு செல்கிறார்கள். யாரும் இந்த பேருந்துநிறுத்த அவலத்தை  கண்டுகொள்வதில்லை. அதிமுக  ஆட்சிக்காலத்தில்(குறிப்பாக நகர நிர்வாகத்திலும் அரசியலிலும்) லாப வேட்டை பணிகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறதே தவிர, மக்கள் நலத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சிறிய உதாரணம்.

இவைகளுக்கெல்லாம் எப்போது விடிவு? 
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர் ஒற்றுமை அடித்தளத்தில் கட்டப்பட்ட ஒப்புவமையில்லா சுதந்திரப் போராட்டப் பலன்களை நாசமாக்கி நாட்டை  படுபாதாள இருளில் தள்ளும் மதவாத பிஜேபி-யின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கும்  எடப்பாடியார் வகையறாக்களை  வீட்டுக்கனுப்பும் மகத்தான பணியைச் செய்து முடிப்பது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

===நீடா சுப்பையா===

;