tamilnadu

img

ஆட்சி மாற்றம்-கொள்கை மாற்றத்திற்கான தேர்தல்.... கும்மிடிப்பூண்டி மாநாட்டில் கே. பாலகிருஷ்ணன் பேச்சு....

திருவள்ளூர்:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, அரசு துறைகளை பலப்படுத்துகின்ற ஒரு கொள்கை மாற்றத்திற்கான தேர்தல் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பு கோரிக்கை மாநாடு  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கே.பாலகிருஷ்ணன்,“வெளி நாடுகளுக்கு செல்ல முடியாத காரணத்தில்தான் பிரதமர் மோடி விமானம் பிடித்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்” என்றார்.தமிழகத்தில் திருக்குறளை மேற் கோள்காட்டி வரும் பிரதமர் மோடி, தில்லியில் 100 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப் பள்ளியில் 6,112 ஏக்கரில் அதானி குழுமத்திற்கு சொந்தமான துறைமுகம் வரப்போகிறது. அவர்களிடம் கடல் வளத்தையும் மோடி அரசு ஒப்படைத்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.கனிம வளம், சுரங்கம், விமானம், விமான நிலையங்களையும் விற்பனை செய்திருக்கும் மோடி அரசு, நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களே இருக்காது என்று அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

வெற்று விளம்பரம்
தமிழகத்தில் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் வெற்றி நடை போடும் தமிழகமாக மாற்றியிருக்கிறார் எடப்பாடி. இவரது தலைமையிலான அரசு லஞ்ச லாவண்யத்தில் வெற்றி நடை போடுகிறது என்றும் கே. பாலகிருஷ்ணன் கடுமையாக சாடினார்.

ஏன் இந்த அவசரம்?
ஐந்தாண்டு காலமாக வன்னிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வராமல் தேர்தல் ஆதாயத்திற்காக சட்டமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளில் கொண்டு வந்துள்ளார்கள் என்றும் இந்த இட ஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சிகளிடமும் கலந்து பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கடந்த காலங்களில் அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தியதையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மீது 24 பக்க புகாரை ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் கொடுத்ததையும் பாலகிருஷ்ணன் நினைவுப்படுத்தினார்.இப்போது நடைபெறும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, அரசு துறைகளை பலப்படுத்துகின்ற ஒரு கொள்கை மாற்றத்திற்கான தேர்தலாகும். இதில் திராவிட முன் னேற்றக் கழகத்தை சார்ந்த மதச்சார் பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நிதியாக 15 லட்சம் ரூபாயை 
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் வழங்கினார்.

இந்த கூட்டத்திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  மாநில குழு உறுப்பினர்கள் ப.சுந்தரராசன், ஏ.எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துளசிநாராயணன், கே.ராஜேந்திரன், ஏ.ஜி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், என்.கீதா, வட்டக் குழு உறுப் பினர்கள் ப.லோகநாதன், டி.கோபாலகிருஷ்ணன்  உட்பட பலர் பேசினர். ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார் நன்றி கூறினார்.

;