tamilnadu

img

என்.டி.சி மில்கள் மூலம் நூல் உற்பத்தி செய்திடுக... மத்திய அரசுக்கு கே.சுப்பராயன் எம்பி கோரிக்கை....

திருப்பூர்:
தனியார் மில்கள் அமல்படுத்தி வரும் நூல் விலையேற்றத்தை சமாளிக்கதேசிய ஜவுளிக் கழகத்தின் (என்.டி.சி)மில்கள் மூலம் நூல் உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளருமான கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது;

மோடி ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி பெறும் என்று நம்பி தொழில்துறையினர் ஆதரவளித்தனர். ஆனால் அனைத்து சிறு, குறு,நடுத்தர தொழில்களையும் அழித்து கார்ப்பரேட்டுகள் வளம் பெறும் கொள்கையை பாஜக அரசு கடைபிடிக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அதன் ஒரு பகுதி தான் தாறுமாறாக அடிக்கடி நிலவி வரும் நூல் விலையேற்றமாகும். திருப்பூரில் வேலைக்கு வந்து குவிந்துள்ள பிற மாநில மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சார்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பின்மையையும், பின்னலாடை தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பையும் இந்த நூல் விலையேற்றம் தொடர்ந்து ஏற்படுத்தி வரு கிறது.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தாக்குதலுக்கு பின் கொரோனா பொது முடக்கம் என அடுத்தடுத்த தாக்குதல்கள் திருப்பூர் தொழிலை பாதித்தன. அதன்பிறகு திருப்பூரிலுள்ள தொழில் நிறுவனங்கள் ஓரளவு மீண்டெழுந்த நிலையில், நூல் விலையேற்றம் மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய ஜவுளி கழகத்தின் கீழ் 100 க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நூல்களை தயார் செய்து  தமிழகத்தின் தேவைக்கு நியாயமான விலையில் மத்திய அரசு வழங்கினால் திருப்பூர் பனியன் தொழில் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றப்படும்.

தொழிலாளர்களும் வேலை பெறுவார்கள். இதன் மூலம் தனியார் மில்களால் அடிக்கடி ஏற்படும் நூல்விலையேற்றத் தாக்குதல் முறியடிக்கப் படும்.மேலும் தமிழக ஆளுநர், ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்பதை மையப்படுத்தி பல்கலைக் கழக துணைவேந்தர்களை அவசர அவசரமாக நியமித்திருக்கிறார். இது அத்துமீறல், ஜனநாயகநடைமுறையை ஆளுநரே மீறுவது நாட்டுக்கு நல்லதல்ல.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேவுள்ள கிராமத்தில் திமுகதலைமையிலான கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் பணியாற்றியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

அரசியல் ரீதியாக நடைபெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் வழக்குகள் பின்னப்பட வேண்டும். சட்டப்படி அதிகபட்ச தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் அருகேவுள்ள நல்லாற்றில் சாயஆலை சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் மாசுபாடு ஏற்பட்டு சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

;