tamilnadu

img

வலுவான மார்க்சிஸ்ட் கட்சியை கட்டுவதே தோழர் நல்லசிவனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.... நூற்றாண்டு விழா நிகழ்வில் மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு....

திருநெல்வேலி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான மறைந்த தோழர்  ஏ.நல்லசிவன் நூற்றாண்டு விழா நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். பாப்பாகுடி ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம் வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே. பழனிச்சாமி ஆகியோர் பேசினர்.சேரன்மகாதேவி ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.கட்சிக்கொடியை ஏற்றிவைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது: 
தமிழகத்தில் வாச்சாத்தி சம்பவம் நடந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவர் தோழர் ஏ.நல்லசிவன். வாச்சாத்தி மக்களுக்காக போராடியவர். நெல்லை சதி வழக்கில் சிறை வைக்கப்பட்டார்.  தோழர் நல்லசிவன் மாநிலச் செயலாளராக இருந்தபோது கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தரையில் துண்டு விரித்து படுத்து விடுவார். தோழர் சங்கரய்யா போன்ற தோழர்கள் கம்யூனிஸ்ட் இயக்க வீரர்கள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பென்சன் வழங்க அரசு முன்வந்தபோது சங்கரய்யா  போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் பென்சன்  வாங்க மறுத்துவிட்டனர்.  இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேட்டபோது, ஜெயிலுக்கு சென்றதே வெகுமதி தானே;  நாங்கள் பென்சன் வாங்குவதற்காகவா  போராடினோம்? என கூறினார், நெல்லை சதி வழக்கில் அடக்குமுறைகளை சந்தித்தவர் தோழர் நல்லசிவன். 

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என போராடும் இயக்கம்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. செங்கல்பட்டில் உள்ள  தடுப்பூசி உற்பத்தி ஆலையை திறக்க வேண்டும்  என முதன் முதலில் குரல் கொடுத்தவர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தான். மனிதனின்  உயிரை வைத்து முதலாளித்துவம் இன்று வரை விளையாடி வருகிறது, கியூபா நாடு பொருளாதார தடைகளை சந்தித்துக் கொண்டே அனைத்து நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்பியது.  வியட்நாம் மீது அமெரிக்கா குண்டுகளை வீசிய போதும் தற்போது அதே அமெரிக்காவுக்கு முகக் கவசங்களை வழங்கியுள்ளது வியட்நாம். இதுதான் கம்யூனிஸ்ட் பண்பாடு, எனவே  கம்யூனிஸ்ட் என்பதில் பெருமை கொள்வோம். தோழர் நல்லசிவன், சங்கரய்யா, ஆர்.உமாநாத்  போன்ற தலைவர்களின் நூற்றாண்டுகளை முன்னெடுத்துச்செல்வோம்.வலுவான ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதுதான் தோழர் நல்ல சிவனுக்கு நாம் செலுத்தும்  உண்மையான அஞ்சலி, மரியாதை ஆகும்.இவ்வாறு அவர் பேசினார்.

;