tamilnadu

img

கட்சியின் அமைப்பாளன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு கே.வரதராசன் ஒரு எடுத்துக்காட்டு.... சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் புகழாரம்....

திருச்சிராப்பள்ளி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் கே.வரத ராசன் கடந்த மாதம் 16-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது படத்திறப்புநிகழ்வு திருச்சிராப்பள்ளியில் புதனன்று நடைபெற்றது. கே.வரதராசனின் உருவப்படத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:- 

கே.வரதராசனைப் போல சிறந்த அமைப்பாளனாக கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் மாறவேண்டும். அதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும். “கட்சியின் அமைப்பாளன்” என்ற தகுதியை அவர் காட்டிய வழியில் நாம் அடையவேண்டும்.கட்சி ஸ்தாபனத்தின் வழியில் நின்று அனைவருக்கும் வழிகாட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. ஸ்தாபனக் கூட்டங்களில் தவறாகப் பேசுபவர்களை “விரோதிக்கமாட்டார்”. அவர்கள் கூறியதை  சிரித்துப் பேசி சமாளிப்பார். பின்னர் அந்தத் தோழர்களை அழைத்து அவர்கள் பேச்சில் என்ன தவறு இருந்தது  என்பதைச் சுட்டிக்காட்டுவார். இந்தப் பண்பைஅனைவரும் கைக்கொள்ள வேண்டும். எந்தத் தோழரையும் இழந்து, கட்சிக்கு இழப்பைஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கமாட்டார். 

ஒரு அமைப்பாளனிடம் “செய்தல், செய்வித்தல்” இந்த இரண்டு குணங்களும் இருக்க வேண்டும். ஒரு கடமையை கட்சி ஊழியன் என்ற அடிப்படையில் தாம் நிறைவேற்றிவிட்டு அதை மற்றவர்களும் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பார். “செய்வித்தல்”  என்பது கே.வரத ராசனின் தனிப் பண்பு. சென்னையில் பீடித் தொழிலாளர்களை அணி திரட்டியது. திருச்சிராப்பள்ளியில் ஹோட்டல் தொழிலாளர்களை ரேடியோ பாலன், கஸ்தூரி ரங்கன் போன்ற தோழர்களோடு இணைந்து அவர் திரட்டியது சிறந்த உதாரணம்.1980-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது கோத்தாரி சர்க்கரை ஆலையைத் தவிர நமக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளுமள விற்கு சங்கம் ஒன்றுமில்லை. அப்போது கே.வரதராசன் கூறியது இது தான். “தோல்வியோ, வெற்றியோ அனைவரிடமும் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்” என்றார். அந்த அடிப்படையில் லால்குடி பகுதியில் நாற்பது விவசாய சங்கக் கிளைகள் அமைக்கப்பட்டன. அந்தக் கிளைகளை வர்க்கப் போராட்ட உணர்வு மிக்க கிளைகளாக மாற்றினார். 

கட்சித் தோழர் ஒவ்வொருவரையும் மட்டுமல்ல. அவர்களது குடும்பத்தைப் பாதுகாப்பதிலும் கே.வரதராசன் மிகக் கவனமாக இருப்பார்.சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதிக்குள் அதிமுக-வினர் மட்டுமல்ல.எம்.ஜி.ஆரால் கூடச் செல்ல முடியவில்லை. அந்தக் கோபத்தை அதிமுகவினர்அரியலூரில் நமது கட்சி நடத்திய பொதுக்கூட்டத் தில் வெளிப்படுத்தினர். பொதுக்கூட்ட திடலில்ஏதோ அசாதாரண நிகழ்வு நடைபெறப் போகிறது என்பதை உணர்ந்தே  அவர் பேசிக்கொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானர். கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் நான்கைந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் இருவர் மாணவர்கள். பின் நாளில் இருமாணவர்கள் கே.வரதராசனைச் சந்தித்து தங்களது நிலையை எடுத்துக்கூறினர். பிடிவாதம் பிடிக்காமல் அவர்களின் எதிர்காலம் கருதி வழக்கைத் திரும்பப்பெற்றார்.

மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நாம் அவர் கற்றுக்கொடுத்த “அமைப்பாளன்” என்ற தகுதியை ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே அவருக்குச் செல்லும் சிறந்த அஞ்சலியாகும்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.

போராட்டம் என்றால் என்ன?
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில், “நாம் நடத்தும் ஒவ்வொரு போராட்டமும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கானது என்பதை புரிந்து அதை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுவார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஏராளமான தலைவர்களை கட்சிக்கு கொடுத்த மாவட்டம். அந்த வரிசையில் கே.வரதராசனும் ஒருவர்.தொலைநோக்குப் பார்வை கொண்ட அவர்,சரியான உத்தியோடு எந்தப் பிரச்சனை யையும் அணுகுவார். போராட்டத்தில் பங்கேற்பவர்களை ஸ்தாபன ரீதியாக ஒருங்கிணைப்பார்.

திருச்சிராப்பள்ளியில் சிம்கோ போராட்டம் 135 நாட்கள் நடைபெற்றது. இதே போல் தினமலர் போராட்டமும் நடைபெற்றது.  ஒரு போராட்டம் நீட்டித்த போராட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பார் கே.வி.. நீட்டித்த போராட்டங்களை நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே. ஒரு போராட்டம் முடிவு பெற்றால் அந்தப் போராட்டத்தின் வெற்றி, பலவீனங்களை பரிசீலிப்பார். குறிப்பாக போராட்டத்தின் “மையக் கரு” வெற்றி பெற்றதா? என பரிசீலிப்பது அவரது தனிச்சிறப்பு.கூட்டுத் தலைமை கூடி எடுக்கும் போராட்டமாக இருந்தாலும், கட்சி என்றைக்கும் தனிநபர் பாத்திரத்தை நிராகரிப்பதில்லை. அதற்கு உதாரணம் கே.வரதராசன் முன்னின்று நடத்திய சிம்கோ போராட்டம்.பணக்கார வர்க்கக் கூட்டணிக்கு எதிராக கிராமப்புற விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் செங்கொடி இயக்கத்தின் கீழ் திரட்டியவர் கே.வரதராசன் என்றார்.

;