tamilnadu

img

கே.வி. ஒரு ஆலமரம்.... விழுதுகள் நாம்... படத்திறப்பில் தலைவர்கள் புகழஞ்சலி....

கே.வரதராசன் ஒரு ஆலமரம், தில்லி விவசாயிகள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெற்றுவரும். வெற்றி பெற்றால் அது கே.வரதராசனுக்குக் கிடைத்த வெற்றி என்று அவரது படத்திறப்பு நிகழ்வில் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
கட்சியின் மூத்த தோழர் ஜி.ரத்னவேலு பேசுகையில், “1986 ஆம் ஆண்டு முதல் மாவட்டச் செயலாளராக நான் பொறுப்பிலிருந்த வரை விவசாயிகள் பிரச்சனை எந்தக் கிராமத்தில் இருந்தாலும் அங்கு முதல் நபராக இருப்பார். கே.வரதராசன் கட்சியை, விவசாயிகள் சங்கத்தை எப்படிக் கட்டுவது எனப் பலருக்குக் கற்றுக்கொடுத்தார். கற்றுக்கொண்டதில் நானும் ஒருவன். ஆர்.உமாநாத்தின் உதவி, டி.கே.ரங்கராஜனின் அரவணைப்பு, பாப்பா உமாநாத்தின் நேசம் ஆகியவற்றோடு கே.வரதராசனோடு இணைந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளேன். அவர் வழியில் நின்று மக்கள் பணியாற்ற வேண்டுமென்றார்.

‘ஹெட் ஆப் தி டிபார்ட்மென்ட்’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசுகையில் “ வாலிபர் போராட்டம் என்றால் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் தலைவர், விவசாயிகள் போராட்டம் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கூலிப் போராட்டம் என்றால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர், பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம் என்றால் சிஐடியு தலைவர்” என அன்றைய காலத்தில் “ஒரு ஹெட் ஆப் தி டிபார்ட்மென்ட்” ஆகத் திகழ்ந்தவர் கே.வரதராசன். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்குத் தீர்வு காணும் வரை விடமாட்டேன் எனப் பிடிவாதமாக இருப்பார். தீண்டாமை ஒழிப்பில் முன்னிலையில் நின்றவர் என்றார். 

‘திருச்சி குமார்’ ஒரு ஆலமரம்
மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் பேசுகையில், தோழர் பி.ராமமூர்த்தி மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது மேலூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக வந்தார் திருச்சி குமார் என்ற கே.வரதராசன். அரசுப்பணியைத் துறந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்ட மகத்தான தலைவர். அவர் ஒரு ஆலமரம். ஆலமரத்தின் விழுதுகளாக ஏராளமானோரை கட்சி உறுப்பினர்களாக. விவசாயிகள் சங்க, விவசாயத் தொழிலாளர் சங்க உறுப்பினராகச் சேர்த்துள்ளார். ஆலமரத்தின் விழுதுகளாக உள்ள நாம் அவரது வழியில் பயணிப்போம் என்றார்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு முன் உதாரணம்
மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் பேசுகையில், “கே.வரதராசன் ஒரு ஜனரஞ்சகமான கம்யூனிஸ்ட். இப்போது நமக்கு ஒரு பாடமாக உள்ளார். அவரிடமிருந்து ஏராளமான படிப்பினைகளைக் கற்றுள்ளோம். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி வாழவேண்டுமென்பதற்கு அவர் உதாரணம். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எங்களைப் போலப் பல தலைவர்கள் உருவாவதற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் அடிநாதமாக விளங்கியவர் கே.வரதராசன் என்றார்.

லால்குடி முதல்  காட்டுப்புத்தூர் வரை...
திருச்சிராப்பள்ளி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் பேசுகையில், “திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி முதல் தொட்டியம் காட்டுப்புத்தூர் வரை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களைச் செங்கொடி இயக்கத்தின் கீழ் திரட்டியதில் கே.வரதராசன் ஒரு மக்கள் தலைவர். ஊழியர்களைப் பாதுகாப்பதில், அவர்களை வளர்த்தெடுப்பதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்றார்.

;