tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் என்.வரதராஜன் நினைவு நாள்....

தோழர் என். வரதராஜன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் பாளையம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் பிறந்தார். திண்டுக்கல்லில் பஞ்சாலைத் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் துவக்கினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் இணைந்து பின்னர்அரசியலில் ஈடுபட்டார். 1943ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது அதில் தம்மை இணைத்துக் கொண்டார்.தமது அயராத பணிகளால் மதுரை மாவட்டச் செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக, மத்தியக்குழு உறுப்பினராக உயர்ந்து திறம்படப் பணியாற்றியவர். 2001லிருந்து 2010 வரை மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர் தோழர் என். வரதராஜன்.

கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பலகட்டப் போராட்டங்களில் பங்கேற்றும், தலைமையேற்றும் மூன்று ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவித்தவர். கட்சியின் மீது அடக்குமுறை ஏவப்பட்ட காலத்தில் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்துகட்சிப் பணியாற்றியவர். தமிழகத்தில் உள்ள சாதாரண ஏழை, எளிய மக்களின் சமூக மேம்பாட்டிற்காகவும், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடியும், மதுரை உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்றவும் பாடுபட்டவர். இத்தகைய போராட்டங்களுக்குத் தலைமையேற்று நடத்தியவரும் கூட. 

அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. இந்தப் போராட்டத்திற்குத் தலைமையேற்று வழி நடத்தியவர் தோழர் என். வரதராஜன். இப்போராட்டத்தின் காரணமாகவே தமிழக அரசு அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித உள்இடஒதுக்கீடு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.தோழர் என். வரதராஜன் 1954ஆம்ஆண்டில் ஜில்லா போர்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ல் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினராகவும் 1977 மற்றும்1980ல் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார். இக்காலங்களில் தமிழக சட்டமன்றத்தில் தோழர் என். வரதராஜன் சிறப்பாகப் பணியாற்றினார்.இத்தகைய பெருமைமிக்க தலைவர் தோழர் என்.வரதராஜன் 2012 ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் காலமானார்.

பெரணமல்லூர் சேகரன்

;