tamilnadu

img

ஆறு, வாய்க்கால்களை தூர்வாராமல் பணத்தை மட்டுமே வாரிச் செல்கிறது எடப்பாடி அரசு... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சனியன்று நடைபெற்றது. அக்கட்சியின் நாகைவடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா.எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: 

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. ஆறு, வாய்க்கால்களை தூர்வாராமல் பணத்தை மட்டுமே வாரிச் செல்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி.மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிறது. மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளையும் இரண்டு கண்களாக நினைத்து செயல்படுகிறது. அமைச்சர் பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடாமல் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வளர்க்கும் அமைச்சராக உள்ளார். தமிழக முதல்வர் பழனிச்சாமி கொள்கை இல்லாமல் பாஜகவுக்கு பாதம் தாங்கும் முதல்வராக செயல்படுகிறார். நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் முதல்வரின் உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை சந்திக்காமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தடை வாங்கி உள்ளனர். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துகாவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க முன்வரவில்லை. ஆனால், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மக்கள் கருத்து தேவையில்லை என்று சட்ட திருத்தத்தை கொண்டு வந்து, காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. திமுக இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 28-ஆம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங் களில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்ட மதவாத சதித் திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிக்கிறது. இதனை முன்பு ஆதரித்த மாநிலங்கள் கூட தற்போது எதிர்த்து வருகின்றன. மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா வரும் போது அதிமுக 11 வாக்குகளையும், பாமக 1 வாக்கினையும் அளித்து ஆதரித்ததன் காரணமாக தான் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப்,சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் என பல மாநிலங்கள் இச்சட்டங்களை எதிர்க்கின்ற நிலையில், தமிழக அரசு மட்டும் வாய்மூடி மவுனமாக உள்ளது ஏன்? இதனை திரும்ப பெற வலியுறுத்தி  பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். மயிலாடுதுறை மக்களவை தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் நிவேதா எம்.முருகன், கௌதமன் ஆகியோர் பேசினர். 

;