tamilnadu

img

மதிப்பெண் முறைகேடு: 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்

 சென்னை:


மதிப்பெண் முறைகேடு தொடர்பாக கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு அரியர் தேர்வு எழுதிய 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில், தேர்வுத் தாள் மறு மதிப்பீட்டின்போது பணத்தை பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல ஆண்டுகளாக இந்த முறைகேடு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கோடிக் கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையின்போது கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுக்கு பிறகு, 3 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதில் 90 ஆயிரம் பேர் கூடுதல் மதிப்பெண் பெற்று இருக்கும் விவகாரம் வெளிவந்தது.

 இந்த விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், பல்கலைக்கழக பதிவாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், தற்காலிக ஊழியர்கள் 37 பேரை பதவி நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது . இந்த நிலையில் 2017/18ல் செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது 130 மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;