tamilnadu

img

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு.... 7 அமைச்சர்கள் பங்கேற்பு...

தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக புதன்கிழமை கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் ஏழு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12 ஆம் தேதி குறுவை பாசனத்துக்காக தண்ணீரை முதல்வர்மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அன்று திறக்கப்பட்ட தண்ணீர்செவ்வாய்க்கிழமை  கல்லணை யை வந்தடைந்தது. இதை யடுத்து புதன்கிழமை காலை கல்லணையில் உள்ள, ஆஞ்சநேயர், ஆதிவிநாயகர், கருப்பண்ண சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர், மேள தாளம் முழங்க, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமைக்கொறடா கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா மற்றும் எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணி துறை பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் தண்ணீர் செல்ல ரெகுலேட்டரின் எலக்ட்ரானிக் பொத்தான்களை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தனர். 
அப்போது அங்கிருந்த எல்லோரும் காவிரி நதியை வணங்கிமலர்களையும், நவதானியங்களை யும் ஆற்றில் தூவி விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.முதலில், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறப்பு விழாவையொட்டி கல்லணை முழுவதும் பாலங்கள், ரெகுலேட்டர்கள், சிலைகளுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது.

பத்து நாட்களில் கடைமடைக்கு செல்லும்
பின்னர் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வார்கள்.தற்போது காவிரி, வெண்ணாற்றில் வினாடிக்கு தலா 2 ஆயிரம் கனஅடியும், கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கன அடியும் திறக்கப்பட்டுள் ளது. நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர்அளவு அதிகரித்து திறக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு பத்து தினங்களில் சென்றடை யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூர்வாரும் பணிகள் தற்போது 90 சதவீதம் முடிந்துள்ளன. தண்ணீர் அந்த பகுதிக்குள் செல்வதற்குள் மீதமுள்ள தூர்வாரும் பணிகளும் முடிந்து விடும்.

குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்ககூட்டுறவுத் துறையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரம் ஆகியவை போதியளவு கையிருப்பு உள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறுவது கடந்தஆட்சியில் செய்த தவறு. இது குறித்து உணவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தால்நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

கல்லணை நீர் மூலம் பயன்பெறும் மாவட்டங்கள்
கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.04 லட்சம் ஏக்கர்நிலங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 0.89 லட்சம் ஏக்கர் நிலங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 0.05லட்சம் ஏக்கர் நிலங்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 0.96 லட்சம் ஏக்கர் நிலங்களும், கடலூர் மாவட்டத்தில் 0.16 லட்சம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதிபெறும். மேலும், நடப்பாண்டில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ள 2.42 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்களும் பயனடையும். கல்லணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரி பாசன பகுதிகளில் கடைமடை சென்ற பின்னர் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்திற்கு உரிய நீர் பங்கீடுஅளிக்கப்படும் என தெரிகிறது. 

;