tamilnadu

img

திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில்களை இயக்குக... ரயில்வே அமைச்சரிடம் எம்.பி.க்கள் கோரிக்கை....

தஞ்சாவூர்:
திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல ரயில் பாதைஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மிகப் பழமையான மீட்டர் கேஜ்ரயில் பாதையாகும். இந்த மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 2019 ஆம் ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதனால் இப்பகுதியில் இருந்து சென்னைக்கான விரைவு ரயில் சேவை2006-ல் நிறுத்தப்பட்டது. அகல ரயில் பாதை பணிகள் நிறைவுற்ற பின்னரும் இத்தடத்தில் முழுமையான ரயில் சேவை துவங்கப்படவில்லை.எனவே இத்தடத்தில், ரயில் சேவைகளை தமிழ் புத்தாண்டில் துவங்கக் கோரி ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் ரயில்வே வாரியத் தலைவர் சுனித் சர்மா ஆகியோரை பிப்.10 அன்று மாலை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் சு.திருநாவுக்கரசர் (திருச்சி), எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்), எம்.செல்வராஜ் (நாகப்பட்டினம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), கா.நவாஸ்கனி (இராமநாதபுரம்), தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் ஹிதாயதுல்லா, அறந்தாங்கி வட்ட ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் ஏ.பி.ராஜ்குமார், பட்டுக்கோட்டை வட்டரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன், அதிராம்பட்டி னம் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின்தலைவர் எம்.எஸ்.ஷிகாபுதீன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுவில், “திருவாரூர் - பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில் பாதையில் உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு போதுமான கேட் மேன்களை நியமனம் செய்ய வேண்டும். மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கிய சென்னை - காரைக்குடி இரவு நேர கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரையிலும், மயிலாடுதுறையில் இருந்து மதுரை வரை பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். ரயில்வே நிர்வாகம் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ள தாம்பரம் - செங்கோட்டை மற்றும் எர்ணாகுளம் -வேளாங்கண்ணி விரைவு ரயில்களை இவ்வழித்தடத்தில் இயக்க வேண்டும். இத்தடத்தில் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகளுக்கு பயன்படும் வகையில் சரக்கு ரயில்களையும் இயக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. 

கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ரயில்வே அமைச்சர் விரைந்து ஆவன செய்வதாக உறுதி அளித்தார். மேலும், ரயில்வே போர்டு சேர்மன் உடனடியாக தொலைபேசி மூலம் தென்னக ரயில்வே பொது மேலாளரை தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொண்டார். அடுத்த கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரயில் உபயோகிப்போர் சங்க பிரதிநிதிகள் இணைந்து சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து இப்பணிகளை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளனர். 

;